பெர்த், ஏப்ரல் 10 – கடலுக்கு அடியில் புதிய சமிக்ஞைகள் கிடைத்த இடத்தைக் குறி வைத்து ஆஸ்திரேலிய மீட்புப் படையினர் தேடுதல் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது கிடைத்து வரும் தகவலின் அடிப்படையில், விமானத்தின் கறுப்புப் பெட்டி இருக்கும் பகுதியை மீட்புப் படையினர் நெருங்கி விட்டதாகவே தோன்றுகிறது. காரணம் தேடுதல் பணிக்குத் தலைமை வகிக்கும் அதிகாரி ஆங்கஸ் ஹௌஸ்டன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் இன்னும் சில தினங்களில் விமானத்தின் பாகங்களை கண்டுபிடித்துவிடுவோம் என்று உறுதியளித்தார்.
எனினும், விமானம் மாயமாகி 30 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் கறுப்புப் பெட்டியின் மின்கலம் (பேட்டரி) காலாவதியாகிவிடும் என்று கூறப்படுகின்றது.
தற்போது தேடுதல் பணிகள் நடைபெற்று வரும் கடல் பகுதியின் அடியில் தான் விமானத்தின் பாகங்கள் கிடக்க வேண்டும் என்று அதிகாரிகள் உறுதியாக நம்புகின்றனர்.
இது குறித்து ஹௌஸ்டன் இன்று வெளியிட்ட அறிக்கையில், “இப்போது தேடுதல் பணி நடைபெற்ற வரும் குறுகிய கடற்பரப்பின் அடியில் விமானத்தின் பாகங்கள் கிடக்கலாம். கறுப்புப் பெட்டியை நெருங்கி விட்டோம். இன்னும் சில நாட்களில் அதை மீட்டு விடுவோம்” என்று மிக உறுதியாக தெரிவித்துள்ளார்.