Home உலகம் ஈராக்கில் வாக்களிக்கச் சென்ற பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாத தாக்குதல் – 57 பேர் பலி

ஈராக்கில் வாக்களிக்கச் சென்ற பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாத தாக்குதல் – 57 பேர் பலி

486
0
SHARE
Ad

0பாக்தாத், ஏப்ரல் 29 – அமெரிக்க படைகளின் வெளியேற்றத்துக்குப் பிறகு ஈராக்கில், கடந்த ஓராண்டு காலமாக வன்முறைத் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இம்மாதம் 30-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சமீப காலமாக தீவிரவாத தாக்குதல்களும், பெரும் உயிரிழப்புகளும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

சுமார் 2 கோடி மக்கள் வாக்களிக்க உள்ள இந்த தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களும், பாதுகாப்பு படையினரும் நேற்று தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். அந்த வாக்குச்சாவடிகளைக் குறிவைத்து தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர்.

மேற்கு பாக்தாத்தில் உள்ள ஒரு வாக்குசாவடியில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 7 காவல் துறையினர் பலியாகினர். பாக்தாத்தின் வடக்கு பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மீதும் மனித குண்டு தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர்.

#TamilSchoolmychoice

நாட்டின் பிற பகுதிகளில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் மேலும் 15 பேர் பலியாகினர். உச்சகட்டமாக ஈரான்- ஈராக் எல்லைப்பகுதியான கனாக்கின் நகரில் நிகழ்ந்த மனித குண்டு தாக்குதலில் 30 பேர் உடல் சிதறி பலியாகினர். நேற்று ஒரு நாளில் மட்டும் நிகழ்த்தப்பட்டத் தாக்குதல் சம்பவங்களில் 57 ராணுவ மற்றும் பாதுகாப்பு படையினர் பலியாகியுள்ளனர். இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவங்களால், நாளை வாக்களிக்க இருக்கும் பொது மக்கள் அச்சத்தில் உறைந்துப் போய் உள்ளனர்.