புத்ராஜெயா, ஜூன் 12 – மாயமான மாஸ் MH370 விமானத்தில் பயணம் செய்த 239 பேரின் உறவினர்களிடம் விமானக் காப்பீட்டு முன்பணமாக தலா 50,000 அமெரிக்க டாலர்கள் (160,700 ரிங்கிட்) அளிக்கப்பட்டுள்ளது.
விமானத்தைத் தேடும் பணி நிறைவடைந்த பின்னர், மீதமுள்ள மொத்த பணமும் வழங்கப்படும் என்று வெளியுறவுத்துறை துணையமைச்சர் டத்தோ ஹம்ஸா ஸைனுதீன் தெரிவித்தார்.
இந்த காப்பீட்டுப் தொகையைப் பெறும் பயணிகளின் உறவினர்களில் 6 பேர் மலேசியர்கள் மற்றும் ஒருவர் சீனாவைச் சேர்ந்தவர். இது தவிர, இன்னும் 40 பேரிடம் காப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கு சீன அரசாங்கம் அவர்களது விபரங்களை சரிபார்த்து வருகின்றது.
விமானத்தில் பயணம் செய்த பணியாளர்கள் உட்பட 239 பேரும் இந்த காப்பீட்டுத் தொகையைப் பெறுவார்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த ஹம்ஸா, “காப்பீட்டுத் தொகையைப் பெறுபவர்களில் பலர் சொந்தமாக வழக்கறிஞர்களை நியமித்து இந்த விவகாரத்தை கவனித்து வருகின்றார்கள். எனவே பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் இந்த தொகையை வழங்குவோம்” என்று தெரிவித்தார்.
கடந்த மார்ச் 8 -ம் தேதி அதிகாலை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து பெய்ஜிங் நோக்கி சென்ற மாஸ் MH370 விமானம் தாய்லாந்து எல்லையைத் தொட்டதும் ரேடார் தொடர்பில் இருந்து விலகியது.
தற்போது 3 மாதங்கள் ஆகியும் விமானம் பற்றிய எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.