கோலாலம்பூர், ஜூலை 18 – விமானம் பற்றிய செய்தி அறிந்தவுடன் கேஎல்ஐஏ அனைத்துலக விமான நிலையத்திற்கு பயணிகளின் உறவினர்கள் அதிகளவில் வந்து கொண்டிருக்கின்றனர்.
அதில் பலர் பயணிகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆனால், அங்கு மலேசியா ஏர்லைன்ஸை சேர்ந்த அதிகாரிகள் யாரும் இல்லை.
விமானப் பணியாளர்களுள் ஒருவரான பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த நூர் ஷாஸானா முகமட் ஷாலே (வயது 31) என்ற பெண்ணின் பெற்றோர் இந்த தகவலை அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து பினாங்கில் அவரது தந்தை முகமட் ஷாலே சம்சுதின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அவள் என் மகள். அவள் நலமுடன் வீடு திரும்ப வேண்டிக்கொள்ளுங்கள். அவளுக்கு மிக விரைவில் திருமணம் நடத்த திட்டமிட்டிருந்தோம். இந்த மாதம் தனக்கு சிறப்பான மாதம் என்று நினைப்பதாக அவள் கூறினாள்” என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
அப்பெண்ணின் தாயார் துக்கத்தால் செய்தியாளர்களிடம் பேச மறுத்துவிட்டார்.
இந்நிலையில், பிரதமர் நஜிப் துன் ரசாக், அதிகாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்திப்பார் என்று தகவல் கிடைத்துள்ளது.