செப்பாங், ஜூலை 20 – எம்எச்17 விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் சிதறிக் கிடக்கும் பயணிகளின் உடமைகள், நகைகள், பணம் போன்றவற்றை மது அருந்திய கிளர்ச்சியாளர்களில் சிலர், சூறையாட நினைப்பதைத் தடுக்க மலேசியா தகுந்த பாதுகாப்பு உதவியை நாடி வருகின்றது.
சர்வதேச விசாரணைக் குழுவில் ஒருவர் இது பற்றி கூறுகையில், “உலகிலேயே மிகப் பெரிய குற்றம் நடந்த இடமாகக் காட்சியளிக்கின்றது” என்று எம்எச்17 விழுந்து நொறுங்கிக் கிடக்கும் இடத்தை குறிப்பிட்டுள்ளார்.
மிக மிக விரைவில் அந்த இடத்தில் தேவையான அனைத்து ஆதாரங்களையும் கைப்பற்றும், நிபுணத்துவ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், இந்த அவசர நிலையை புரிந்து கொண்ட மலேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய், நேற்று இரவு எம்எச்17 இடத்திற்கு சென்று மலேசிய பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழுவினருக்கு உதவ உக்ரைன் சென்றார்.
தனது பயணத்திற்கு 1 மணி நேரத்திற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த லியாவ், விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்து அனைத்து ஆதாரங்களையும் கைப்பற்ற தேவையான பாதுகாப்பை வழங்கும் படி அனைவரையும் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, சம்பந்தப்பட்ட இடத்திற்கு மலேசிய குழுவினரை அனுமதிக்குமாறு பிரதமர் நஜிப் துன் ரசாக், அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஐநா பொதுச்செயலாளர் பான் கீ மூன் உள்ளிட்ட உலகத் தலைவர்களைக் கேட்டுக் கொண்டார்.