Home நாடு திடீர் திருப்பம்! பாஸ் கட்சியின் 3 ஆட்சிக் குழு உறுப்பினர்கள் மந்திரி பெசாராக பரிந்துரை!

திடீர் திருப்பம்! பாஸ் கட்சியின் 3 ஆட்சிக் குழு உறுப்பினர்கள் மந்திரி பெசாராக பரிந்துரை!

464
0
SHARE
Ad

PAS-Logo-Sliderஷா ஆலாம், செப். 5 – சிலாங்கூர் மந்திரி பெசார் பதவி தொடர்பான விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பக்காத்தான் கூட்டணிக் கட்சிகள் மூன்றும் மந்திரி பெசார் பதவிக்கு பிகேஆர் தலைவர் வான் அசிசாவின் பெயரை மட்டுமே அரண்மனைக்குப் பரிந்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஸ் சார்பில் அக்கட்சியின் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் 3 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மந்திரி பெசார் பதவிக்கு இரண்டுக்கும் மேற்பட்ட பெயர்களை பரிந்துரைக்க வேண்டும் என அரண்மனைத் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதையடுத்து 3 ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பெயர்களுடன் கூடிய கடிதத்தில் பாஸ் கட்சித் தலைவர்  அப்துல் ஹாடி அவாங் தனிப்பட்ட முறையில் கையெழுத்திட்டு, அரண்மனைக்கு அனுப்பி வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

#TamilSchoolmychoice

இஸ்கந்தர் அப்துல் சமாட், சலாஹின் முக்யி, அஹ்மட் யுனுஸ் ஹாய்ரி ஆகிய மூவரின் பெயர்களே அரண்மனைக்கு பரிந்துரைக்கப்பட்டதாக பாஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Hadi Awangஇது தொடர்பாக அப்துல் ஹாடி அவாங் தரப்பை தொடர்பு கொண்டபோது, இத்தகையதொரு கடிதம் அரண்மனைக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுவதை அவர் மறுக்கவில்லை என ஸ்டார் இணையத் தளம் குறிப்பிட்டுள்ளது.

பாஸ் தலைவர் ஹாடி அவாங்கின் உதவியாளரே நேரடியாக கடிதத்தை அரண்மனையில் ஒப்படைத்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

“எனினும் இந்த விஷயத்தில் கட்சித் தலைமைதான் எத்தகைய அறிவிப்பையும் வெளியிட முடியும். இதில் வெளியே தெரிவிக்க இயலாத பல விஷயங்கள் உள்ளன. அவை குறித்து விவாதிக்க இயலாது,” என ஹாடி அவாங்குக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார்.

மந்திரி பெசார் பதவிக்கு டத்தோஸ்ரீ வான் அசிசாவின் பெயரை மட்டுமே அரண்மனைக்குப் பரிந்துரைப்பது என பக்காத்தான் கூட்டணிக் கட்சிகள் மூன்றும் ஒப்புக் கொண்ட நிலையில், பாஸ் கட்சி அதற்கு மாறாக செயல்பட்டிருப்பதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், பக்காத்தான் கூட்டணி முறியும் அபாய கட்டத்தில் தற்போது இருக்கின்றது.

அரண்மனை கேட்டுக் கொண்டதற்கு இணங்க மந்திரி பெசார் பதவிக்கு இரண்டுக்கும் மேற்பட்ட பெயர்களைப் பரிந்துரைக்க வேண்டும் என பாஸ் ஏற்கெனவே வலியுறுத்தி இருந்தது.