கோலாலம்பூர், நவம்பர் 7 – மைக்ரோசாப்ட் நிறுவனம் ‘ஸ்கைப்’ (Skype)-ல் முதல் முறையாக குரல் மொழி பெயர்ப்பு வசதியை அறிமுகப்படுத்த இருக்கின்றது.
முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், கடந்த 2003-ம் ஆண்டு தொலைத் தொடர்பு பயன்பாட்டு மென்பொருளான ஸ்கைப்-ஐ முதன் முதலாக அறிமுகப்படுத்தியது.
குரல் அழைப்புகளை ஏற்படுத்துவதற்கும், காணொளி மூலம் கலந்துரையாடவும் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மென்பொருள் வெகு விரைவில் பயனர்களின் மத்தியில் பிரபலம் அடைந்தது.
எனினும், தற்போது ஏற்பட்டுள்ள அண்ட்ரோய்டு புரட்சி மற்றும் திறன்பேசிகளின் புதிய செயலிகள் காரணமாக, ஸ்கைப் அலுவல் ரீதியான மென்பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப்-ல் புதிய மாற்றம் ஒன்றை செய்துள்ளது. இதன் மூலமாக பயனர்கள் மொழி தெரியாத நபர்களுடனும் ஸ்கைப் வழியே கலந்துரையாட முடியும். பயனர்களுக்குத் தேவையான குரல் மொழி பெயர்ப்புப் பணிகளை ஸ்கைப்பே கவனித்துக் கொள்ளும். மேலும், இதில் ஆண், பெண் என இருவருக்கும் தனித்தனியான குரல் மொழிபெயர்ப்பு வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய வசதி பயனர்கள் மத்தியில் இன்னும் முழுமையான பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படவில்லை. எனினும் மைக்ரோசாப்ட் நிறுவனம் இதற்கான பரிசோதனை முயற்சிகளை விரைவில் ஏற்படுத்த இருக்கின்றது.
ஸ்கைப் குரல் மொழிபெயர்ப்பின் முதற்கட்டமாக ஆங்கிலம், அரபு, பிரஞ்சு, மாண்டரின் உள்ளிட்ட12 மொழிகள் இடம்பெற இருப்பதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.