யாங்கோன், நவம்பர் 15 – மியான்மர் அதிபர் தேர்தலில், அந்த நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ஆங் சான் சூகி போட்டியிடத் தடை விதித்திருப்பதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மியான்மரில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற இருக்கின்றது. அங்கு, ஜனநாயகத்தை மீட்க பல்வேறு போராட்டங்களில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட எதிர்கட்சித் தலைவர் ஆங் சான் சூகி, தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அவரது மகன்கள் இருவர், வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ளவர்கள் என்பதால் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு அந்த நாட்டின் அரசியல் சட்டப்பிரிவு தடையாக இருக்கின்றது.
இந்த நிலையில், தென்கிழக்கு ஆசிய உச்ச நிலை மாநாட்டுக்கு மியான்மர் சென்றிருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, யாங்கோனில் ஆங் சான் சூகி சந்தித்துப் பேசினார்.
அதன் பின்னர் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது அவர், “ஆங் சான் சூகி அதிபர் தேர்தலில் போட்டியிட தடையாக சட்டப்பிரிவை காட்டுகிறார்கள்”.
“ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு அவரது பிள்ளைகளை காரணமாக தடையாக காட்டுகிற சட்டப்பிரிவு அர்த்தம் அற்றது” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், “ஜனநாயக கண்ணோட்டத்தில் பார்த்தால், குறிப்பிட்ட ஒருவருக்கு எதிராக பாரபட்சம் காட்டுவது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல” என்றும் அவர் கூறியுள்ளார்.