ஆஸ்லோ, நவம்பர் 19 – தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நார்வே எப்போதும் நிதி கொடுத்தது கிடையாது என்று முன்னாள் சமாதான தூதர் எரிக் சொல்ஹெய்ம் விளக்கம் அளித்துள்ளார். இலங்கையின் குருநாகலில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டின் அதிபர் மகிந்த ராஜபக்சே,
“நார்வே தூதர் எரிக் சொல்ஹெய்ம் விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவி செய்தார். அவர் இப்போது இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் சாட்சியமளிக்க இருக்கிறார்” என்று கூறியிருந்தார்.
இதனை தமது ட்விட்டர் பக்கத்தில் மறுத்திருந்த எரிக் சொல்ஹெய்ம், ராஜபக்சே பொய் சொல்லுகிறார் என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து நேற்று ஒரு விளக்க அறிக்கையையும் எரிக் சொல்ஹெய்ம் வெளியிட்டுள்ளார்.
அதில் எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளதாவது: “இலங்கையில் அமைதி முயற்சிகளில் முழுமையாக ஈடுபடுவதற்காக, விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகத்துக்குத் தேவையான உபகரணங்களைத்தான் நார்வே வழங்கியது”.
“அதில், ஒரு வானொலி ஒலிபரப்புக்கான கருவியும் அடங்கும். அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட இலங்கை தலைவர்களுக்கு இதுபற்றிய முழுமையான தகவல்களையும் நாங்கள் தெரிவித்திருந்தோம்.”
“இலங்கையில் அனைத்து அமைதி முயற்சிகள் குறித்தும் இலங்கை அரசுடன் வெளிப்படையாகவே நார்வே தெரிவித்து வந்தது. இலங்கையின் அதிபராவதற்கு முன்பே மகிந்த ராஜபக்சேவை நான் பல முறை சந்தித்துப் பேசியிருக்கிறேன்”.
“அமைதி முயற்சியின் அனைத்து விவரங்களையும் அவருக்குத் தெரிவித்தும் இருக்கிறேன். ராஜபக்சே அமைச்சராக இருந்த போதும், பிரதமராக இருந்த போதும், அமைதி பேச்சுவார்த்தைக்கு முழுமையான ஆதரவை தெரிவித்து அமைதி முயற்சி தொடர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்”.
“2005 அதிபர் தேர்தலுக்குப் பின்னர் பகிரங்கமாகவும், தனிப்பட்ட முறையிலும் இலங்கைக்கு வருமாறு அவர் என்னை அழைத்திருந்தார். தம்முடைய அரசியல் கோரிக்கைகளை விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனிடம் தெரிவிக்குமாறும் கூட என்னிடம் ராஜபக்சே கேட்டுக் கொண்டார்.”
“அனைத்துத் தகவல்களும் முறைப்படி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்கு தெரிவிக்கப்பட்டன. அமைதி முயற்சிகளில் ஆற்றிய பங்களிப்புக்காக ராஜபக்சே எனக்குத் தனிப்பட்ட முறையிலும், நார்வே நாட்டுக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.”
“2010-ம் ஆண்டு கடைசியாக அவரை சந்தித்த போது, நார்வேயின் அமைதி முயற்சிகளை அங்கீகரித்து இலங்கைக்கு வருமாறும் ராஜபக்சே அழைத்திருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் -இலங்கை அரசு இடையேயான அனைத்து அமைதிப் பேச்சுவார்த்தை விவரங்களும் 2015ம் ஆண்டு வெளியாக உள்ள நூலில் இடம் பெறும்”.
“இந்த நிலையில் விடுதலைப் புலிகள், இலங்கை அரசாங்கம் என இரண்டு தரப்பினராலும், இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் சபையால் தொடங்கப்பட்டுள்ள விசாரணைக்கு, சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும், நேர்மையாக வழங்குவது எனது கடமை”.
“ஆனால், ஜெனிவாவில் தங்களுக்கு எதிராக சாட்சியங்களை அளிக்க எரிக் சொல்ஹெய்ம் திட்டமிட்டுள்ளார் என்று ராஜபக்சே கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்” என எரிக்சொல்ஹெய்ம் தமது அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளார்,