துபாய், டிசம்பர் 11 – தினத்தந்தி நாளிதழ் துபாய் நகரில் தனது புதிய பதிப்பை துவங்க உள்ளது. இதன் மூலம் துபாயில் அச்சாகும் முதல் தமிழ் பத்திரிகை என்ற பெருமையை அந்த நாளிதழ் பெற்றுள்ளது.
முன்னணி தமிழ் நாளிதழான தினத்தந்தி ஏற்கனவே, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, வேலூர், கடலூர், ஈரோடு, நாகர்கோவில், தஞ்சை, திண்டுக்கல், புதுச்சேரி, பெங்களூரு, மும்பை ஆகிய 16 நகரங்களில் இருந்து வெளி வருகிறது.
17-வது பதிப்பு துபாய் நகரில் தொடங்கப்படுகிறது. இதற்கான தொடக்க விழா துபாய் அல்கூஸ் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள கலீஜ் டைம்ஸ் பத்திரிகை அலுவலகத்தில் நேற்று சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் கலந்து கொண்டு தொடங்கி வைத்ததுடன் முதல் பிரதியையும் வெளியிட்டார். நடிகர்கள் சிவகார்த்திகேயன், பிரசன்னா, நடிகை சினேகா ஆகியோர் முதல் பிரதியை பெற்றுக்கொண்டனர்.
அபுதாபி, துபாய், சார்ஜா, அஜ்மான், புஜேரா, உம் அல் குவைன், நாசல் கைமா ஆகிய 7 நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் ஏராளமான இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தினத்தந்தி நாளிதழ் துபாயில் பதிப்பை ஆரம்பிக்க உள்ளது. துபாயில் அச்சாகும் முதல் தமிழ் பத்திரிகை என்ற பெருமையும் இதன் மூலம் அப்பத்திரிகைக்கு கிடைக்க உள்ளது. தினத்தந்தி துபாய் பதிப்பின் இதழ், நேற்று புதன்கிழமை முதல் வெளியாகிறது.
தினத்தந்தி’, தனது 17-வது பதிப்பை ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் உள்ள துபாயில் தொடங்கி இருப்பதற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சரத்குமார் மற்றும் பல அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.