பெஷாவர், டிசம்பர் 17 – பாகிஸ்தானில் ராணுவப் பள்ளிக்குள், தற்கொலைப்படை தீவிரவாதிகள் நுழைந்து, வகுப்பறைகளில் இருந்த குழந்தைகள் மீது கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் 140 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 160 பேர் உயிரிழந்தனர்.
சுமார் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த கடும் சண்டை 10 மணி நேரம் நீடித்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.
பள்ளிக்குச் சென்ற தங்களது குழந்தைகளின் நிலை அறிய பள்ளிக்கு வெளியே திரண்ட பெற்றோரை சமாதானப்படுத்தவும், தடுக்கவும் முடியாமல் ராணுவத்தினர், போலீசார், பாதுகாப்பு படையினர் திணறினர்.
பாகிஸ்தான் முழுவதும் 146 ராணுவ பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் ராணுவ அதிகாரிகள், வீரர்கள் மற்றும் பொதுமக்களின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இந்த மாணவர்கள் அனைவரும் 10 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். இந்நிலையில், பள்ளிக்கு அருகேயுள்ள கல்லறைக்குள் பதுங்கியிருந்த, தற்கொலைப்படை தீவிரவாதிகள், கருப்பு உடைகளை அணிந்து, பள்ளிச்சுவரில் ஏறிக் குதித்து நேற்று காலை உள்ளே நுழைந்தனர்.
இதையடுத்து, அங்கிருந்த மாணவர்களையும், ஆசிரியர்களையும் நோக்கி தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.
பல தீவிரவாதிகள் ராணுவ உடையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத மாணவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இருப்பினும், தீவிரவாதிகளின் துப்பாக்கித் தோட்டாக்கள் பலரது உடலை துளைத்தன. உயிரைக் காக்கும் முயற்சியாக ஏராளமான மாணவர்கள் வகுப்பறைக்குள் சென்று பதுங்கிக் கொண்டனர். இதையடுத்து, ஒவ்வொரு வகுப்பாக நுழைந்த தீவிரவாதிகள் அங்கிருந்த மாணவர்களை காட்டுமிராண்டித்தனமாக சுட்டனர்.
மாணவர்களை வரிசையாக நிற்கவைத்து சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதில், பலரது உயிர், சம்பவ இடத்திலேயே பிரிந்தது. கண்மூடித்தனமாக தீவிரவாதிகள் சுட்டதில், மாணவர்கள் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர். வகுப்பறைகள், பள்ளி என்று எங்கு பார்த்தாலும் ரத்தம் சிதறி கிடந்தது.
குண்டு காயமடைந்த மாணவர்கள் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது. பல மாணவர்கள் தரையில் படுத்து உயிர் தப்பியுள்ளனர். தீவிரவாதிகள் வேறு திசைக்கு சென்றதும் பல மாணவர்கள் வெளியே தப்பி ஓடிவந்துள்ளனர்.
பள்ளிக்குள் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியது பற்றி தகவல் கிடைத்ததும் ராணுவத்தினர் விரைந்து வந்து பள்ளியை முற்றுகையிட்டனர். ஹெலிகாப்டரிலும் வானில் வட்டமிட்டபடி கண்காணித்தனர்.
பள்ளிக்குள் துப்பாக்கியால் சுடும் சத்தமும், குண்டுகள் வெடித்த சத்தமும் கேட்டதால், தீவிரவாதிகள் எத்தனை பேர் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்ற விவரம் உடனடியாகத் தெரியவில்லை. பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 140 மாணவர்கள், ஒரு ஆசிரியர், ராணுவ வீரர் என மொத்தம் 160 பேர் உயிரிழந்தனர். தீவிராவதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, ஒரு சில மாணவர்கள், பள்ளியின் பின்புற வாசல் வழியாகச் சென்று உயிர் தப்பினர்.
சுமார் 100-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேசியதாவது;- “இது தேசத்துக்கு ஏற்பட்ட பேரிடர். உயிரிழந்தவர்கள் அனைவரும் என்னுடைய குழந்தைகள். இந்த இழப்பு, எனக்கு ஏற்பட்டது”.
“பெஷாவர் தாக்குதல் கோழைத்தனமாது. தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில், அரசும் ராணுவமும் முக்கிய முடிவை எடுக்கும். தீவிராதத்தை ஒழிக்கும் வரையில் நாங்கள் ஓயமாட்டோம்.
தாக்குதல் நடத்தியதற்கான விளைவுகளை தலிபான்கள் சந்திப்பார்கள். அடுத்த 3 நாட்களுக்கு, நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என நவாஸ் ஷெரீப் பேசினார்.
இதேபோன்று, பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் இம்ரான் கான், மதகுரு காதிரி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த இக்கட்டான நேரத்தில் அரசுக்கு தங்களது முழுஒத்துழைப்பு இருக்கும் என்றும் உறுதி அளித்துள்ளனர்.
இந்த தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. தீவிரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டு, அதனை சமுதாயத்தில் இருந்து முற்றிலுமாக வேரறுக்க வேண்டும் என அதிபர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
தாலிபான்களின் தாக்குதல் கோழைத்தனமானது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத கொஞ்சம் கூட உணர்வே இல்லாத செயல். இது பள்ளிக் குழந்தைகளான அப்பாவி மக்களின் உயிர்களை பறித்துள்ளது என்று பிரதமர் மோடி கண்டித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நான் இந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். இது கோழைத்தனமான, மனிதத் தன்மையற்ற தாக்குதல். இது தீவிரவாதத்தின் உண்மை முகத்தை காட்டியுள்ளது என்று ட்விட்டரில் கூறியுள்ளார்.
இதேபோன்று, காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்களும், தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.