ஜகார்த்தா, ஜனவரி 12 – ஜாவா கடலில் சுமார் 30-32 மீட்டர் ஆழத்தில் (99 – 106 அடி) விபத்திற்குள்ளான ஏர் ஆசியா QZ8501 விமானத்தின் கறுப்புப் பெட்டி இருப்பதைக் கண்டறிந்துள்ள முக்குளிப்பு வீரர்கள், இன்னும் அதை மேலே கொண்டு வர வில்லை.
காரணம், கறுப்புப் பெட்டி விமானத்தின் மிகப் பெரிய சிதைந்த பாகம் ஒன்றிற்கு அடியில் இருப்பதால், அவர்களால் அதை உடனடியாக அப்புறப்படுத்த இயலவில்லை என்று கூறப்படுகின்றது.
என்றாலும், ஏற்கனவே விமானத்தில் வால் பகுதியை மேலே கொண்டு வரப் பயன்படுத்திய பலூன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இன்று திங்கட்கிழமை கறுப்புப் பெட்டி மீட்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடுமையாக வீசிய புயல் காரணமாக விமானம் விபத்திற்குள்ளாகி இருக்கலாம் என்று இந்தோனேசிய வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறி வந்தாலும், விமானத்தின் கறுப்புப் பெட்டியை மீட்டால் தான் அதன் மூலம் விபத்திற்கான உண்மையான காரணம் கண்டறியப்படும்.