நியாமே, ஜனவரி 20 – மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் நபிகள் நாயகத்தை கிண்டல் செய்து கார்ட்டூன் வெளியிட்ட ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிகையை கண்டித்து நடந்த போராட்டத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்.
பிரான்ஸில் உள்ள வார பத்திரிகையான ‘சார்லி ஹெப்டோ’ நபிகள் நாயகத்தை கிண்டல் செய்து கார்ட்டூன் வெளியிட்டதால் அதன் அலுவலகத்திற்குள் புகுந்த 2 தீவிரவாதிகள் 12 பேரை சுட்டுக் கொன்றனர்.
இந்த தாக்குதலுக்கு பிறகு கடந்த வாரம் வெளியான பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் மீண்டும் நபிகள் நாயகத்தை கிண்டல் செய்து கார்ட்டூன் வெளியிட்டனர்.
இதை கண்டித்து மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் போராட்டம் வெடித்தது. வெள்ளிக்கிழமை தேவாலயங்கள் மற்றும் மதுபானக் கூடங்களுக்கு தீ வைக்கப்பட்டதில் 5 பேர் பலியாகினர்.
மேலும் சனிக்கிழமை ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிக்கையை கண்டித்து தலைநகர் நியாமேவில் நடந்த போராட்டத்தின்போது 5 பேர் பலியாகினர்.
‘சார்லி ஹெப்டோ’ நபிகள் நாயகத்தை கிண்டல் செய்து கார்ட்டூன் வெளியிட்டதற்கு பல நாட்டு முஸ்லீம்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஈரான் அரசு ‘சார்லி ஹெப்டோ’ தாக்குதலை கண்டித்த போதிலும் நபிகள் நாயகத்தின் கார்டூனை வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
‘சார்லி ஹெப்டோ’ இஸ்லாத்தை அவமதித்துவிட்டதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. சார்லி ஹெப்டோவுக்கு ஆதரவு தெரிவித்த நாளிதழுக்கு தடை விதித்து ஈரான் அதிகாரிகள் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளனர்.