திருச்சி, பிப்ரவரி 13 – ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. கள்ள ஓட்டு போட்டால் ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, முதல்வர் மற்றும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இழந்தார்.
இதையடுத்து, ஸ்ரீரங்கம் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 13-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. திமுக சார்பில் ஆனந்த், அதிமுக சார்பில் வளர்மதி, பாஜ சார்பில் சுப்பிரமணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அண்ணாதுரை மற்றும் சுயேட்சைகள் உள்ளிட்ட 29 பேர் போட்டியிடுகின்றனர்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஒரு தலைமை அதிகாரி உள்பட 4 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மொத்தம் 1,572 அலுவலர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். இன்று காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை மதிய உணவு இடைவெளியின்றி நடைபெறும்.
வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான பஞ்சப்பூரில் உள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்படும். 16-ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி மதியத்திற்குள் முடிவு அறிவிக்கப்படும்.
தமிழக தேர்தல் ஆணையம் டுவிட்டரில் இணைந்துள்ளது. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விவரங்களை டுவிட்டரில் உடனுக்குடன் தெரிவிக்க முடிவு செய்துள்ளது.
இதன்மூலம் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் நம்புகிறது. வாக்குப்பதிவு விவரங்களை அறிவிக்க டுவிட்டரை பயன்படுத்துவது இதுவே முதன்முறை.