புதுடெல்லி, மார்ச் 24 – சமூக வலைத்தளங்களில் கூறப்படும் கருத்து சுதந்திரம் தொடர்பான வழக்கில், சட்டப் பிரிவு 66-ஏ என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட பக்கங்களில் வெளியிடப்படும் கருத்துகள், விமர்சனங்கள் அவதூறாக இருந்தால் சம்பந்தப்பட்டவரை கைது செய்ய வழிவகை செய்யும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66ஏ தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இவ்வாறு இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.
கடந்த 2000-ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66ஏ மற்றும் அதில் 2009-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி, சுதந்திரமாக கருத்துகள் வெளியிட தடை விதிக்கப்பட்டது. இந்தச் சட்டப் பிரிவின் கீழ் கைது செய்யப்படும் நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனைக்கு வாய்ப்பிருந்தது,
இந்நிலையில் இந்த வழக்கு குறித்த விசாரணை முடிவில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், “சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துகள், விமர்சனங்கள் அவதூறாக இருந்தால் தொடர்புடையவரை கைது செய்ய வழிவகை செய்யும் சட்டப் பிரிவு 66-ஏ , அரசியல் சாசனத்துக்கு எதிரானது”.
“பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்தை நேரடியாகப் பறிப்பதாக உள்ளது. இச்சட்டப்பிரிவில் உள்ள சில வார்த்தைகள் பொதுவாக இருப்பது ஏற்புடையதல்ல. ஒருவருக்கு அவதூறாக உள்ள ஒன்று, மற்றவருக்கு இல்லாமல் போகலாம்”.
‘எனவே இச்சட்டப்பிரிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எனவே தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66-ஏ ரத்து செய்யப்படுகிறது” என நீதிபதிகள் தெரிவித்தனர்.