கோலாலம்பூர், மார்ச் 31 – ஹூடுட் சட்டதிருத்தம் பற்றிய கட்டுரை வெளியிட்டது தொடர்பில் ‘தி மலேசியன் இன்சைடர்’ செய்தி இணையதளத்தின் தலைமை நிர்வாகி, ‘தி எட்ஜ்’ பதிப்பாளர் மற்றும் 3 நிர்வாக ஆசிரியர்களை காவல்துறை கைது செய்திருப்பதற்கு சக செய்தி நிறுவனமான ‘மலேசியாகினி’ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த கைது நடவடிக்கை மலேசியாவில் ஊடக சுதந்திரத்திற்கு எதிரான அப்பட்டமான தாக்குதல் என்றும், பிரதமர் நஜிப் துன் ரசாக் உருமாற்றம் குறித்து கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் வெற்று வாக்குறுதிகள் ஆகிவிட்டன என்றும் ‘மலேசியாகினி’ இணையதளம் விமர்சித்துள்ளது.
தவறான செய்திகளை வெளியிடுவதை ஊடக சுதந்திரம் அனுமதிக்கவில்லை என்றாலும், நிர்வாக ஆசிரியர்களையும், செய்தியாளர்களையும் கைது செய்து தடுத்து வைப்பதில் எந்த ஒரு நியாயமும் இல்லை என்றும் ‘மலேசியாகினி’ குறிப்பிட்டுள்ளது.
காவல்துறை நினைத்திருந்தால் இது போன்ற கடுமையான நடவடிக்கைகளுக்குப் பதிலாக நிர்வாக ஆசிரியர்களிடம் எளிமையாக விசாரணை நடத்தியிருக்கலாம் என்றும் ‘மலேசியாகினி’ தெரிவித்துள்ளது.
இது செய்தியாளர்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டிருக்கும் கடுமையான நடவடிக்கை என்பதோடு, அதிகாரத்தைப் பயன்படுத்தி செய்தியாளர்கள் தங்களது கடமைகளை செய்ய விடாமல் தடுக்கும் முயற்சி என்றும் ‘மலேசியாகினி’ விமர்சித்துள்ளது.
இத்தகைய நேர்மையற்ற நடவடிக்கைகளும், அதிகார துஷ்பிரயோகங்களும் தான் தங்களுக்கு எதிராக பேசுபவர்களை அடக்கும் சர்வாதிகார ஆட்சியாளர்களின் தனித்துவமாகும் என்றும், அமைதியை நிலைநாட்டுகின்றோம் என்ற பெயரில் இது போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ‘மலேசியாகினி’ கூறியுள்ளது.
இது போன்ற நயவஞ்சகமான திட்டங்களை வீழ்த்த மலேசியர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்றும் ‘மலேசியாகினி’ கருத்துத் தெரிவித்துள்ளது.