ஜகார்த்தா, ஏப்ரல் 28 – பாலி நயன் வழக்கில் மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் மயூரன் சுகுமாரன் உட்பட 9 பேருக்கும் இன்று தண்டனை நிறைவேற்றப்படும் என்று கடந்த சனிக்கிழமையே அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு கருணை காட்ட வழியே இல்லை என்பதை உணர்ந்துள்ள மயூரன் சுகுமாரன், தண்டனை காலத்தில் தான் கற்ற ஓவியப் பயிற்சியின் மூலம் தனது மனக்குமுறல்களை கொட்டித் தீர்க்கிறார்.
சுகுமாரன் மற்றும் அண்ட்ரு சானை பார்ப்பதற்காக இந்தோனேசியா சென்றிருந்த அவரது குடும்பத்தினர் ஒவ்வொருவரும் சுகுமாரன் வரைந்த ஓவியங்களை கையில் வைத்து இருந்தனர், அவர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு ஓவியங்களிலும் மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் அவரின் நிலையை எடுத்துரைப்பதாக இருந்தன.
கடைசியாக மயூரன் தன் கைப்பட எழுதியதை, அவரின் சகோதரர் பத்திரிக்கையாளர்களிடம் காண்பித்தார். அதில், “வாழ்வின் கடைசி நிமிடங்கள் தொடங்கி விட்டன” என்று குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல் சுகுமாரன், தனது இதயத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட துளையுடன் ஒரு ஓவியத்தையும் வரைந்துள்ளார். அவரின் ஓவியங்கள் அனைத்தும் மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் அவரின் மனக் குமுறல்களாகவே உள்ளன.
மயூரன் சுகுமாரன் மற்றும் அண்ட்ரு சான் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டுள்ள தண்டனை பற்றி சுகுமாரனின் சகோதரர் சின்து சுகுமாரன் கூறுகையில், “இந்தோனேசியப் பிரதமர் எங்களது கெஞ்சல்களுக்கு செவி சாய்க்க மறுக்கிறார். அவர் நினைத்தால் இந்த நிகழ்வைத் தடுக்க முடியும். ஆனால் அவர், தனது கருணையை வெளிக்காட்ட வில்லை. அனைவரும் அவரிடத்தில் கெஞ்ச வேண்டும் என எதிர்பார்க்கிறார்.”
“நடக்கப்போவதை உணர்ந்துள்ள எனது சகோதரர், தனது இறுதி நிமிடங்களை ஓவியகளுடனே கழிக்க விரும்பினார்” என்று தெரிவித்துள்ளார்.