ரொம்பின், மே 6- நேற்று நடைபெற்ற ரொம்பின் இடைத்தேர்தலில் விதிமுறைகளை மீறி வாக்குப்பதிவின் போது வாக்கு சேகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அத்தகைய நடவடிக்கை நிரூபிக்கப்பட்டால், விதிமுறைகளை மீறியவர்களுக்கு 3 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் அஜீஸ் யூசஃப் கூறினார்.
“தேர்தல் பிரசாரத்திற்கு என உரிய அவகாசம் அளித்துள்ளோம். எனினும் அவர்கள்
தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள். இது முறையல்ல,” என்று நேற்று அப்துல் அஜீஸ் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற ரொம்பின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவின் போது, வாக்குச் சாவடிகளின் முன் நின்றிருந்த தேமு மற்றும் பாஸ் கட்சி ஆதரவாளர்கள் தங்களது வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களிடம் பிரசாரம் செய்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ ஹசான் ஆரிஃபின் 23,796 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஸ் வேட்பாளர் நஸ்ரி அகமட்டை 8,895 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.
இதனிடையே, நாளை மே 7-ம் தேதி நடைபெறவுள்ள பெர்மாத்தாங் பாவ் தொகுதி இடைத்தேர்தலில், இது போன்ற தவறுகள் நடக்காமல் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.