கோலாலம்பூர், மே 21 – தம்படம் எனும் செல்ஃபி மோகம் இன்றைய இளைஞர்களின் முக்கிய பொழுது போக்காக இருந்து வருகிறது. எதற்கெடுத்தாலும் தம்படம் என்ற எண்ணம், பல்வேறு சமயங்களில் சர்ச்சைகளையும், விபரீதங்களையும் ஏற்படுத்தத் தவறியதில்லை. மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழக (Universiti Teknologi MARA) மாணவர் ஒருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தம்பட சர்ச்சையில் சிக்கிக் கொண்டார்.
மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 82-வது பட்டமளிப்பு விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.
நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்ரப் ஆயுப் பட்டங்களை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது, முகமட் ஹஸ்ருல் ஹரிஸ் முகமட் ரட்ஸெல்ப் என்ற மாணவர், தான் பட்டம் பெறுகின்ற சமயத்தில் உற்சாகமாகி, துணை வேந்தர் மற்றும் மேடைக்கு முன்னாள் அமர்ந்து உள்ள மாணவர்களையும் சேர்த்து தம்படம் எடுத்துக் கொண்டார்.
துணை வேந்தரிடம் அவமரியாதையாக நடந்து கொண்ட காரணத்திற்காகவும், பல்கலைக்கழகத்தின் விழா மேடையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காகவும் பல்கலைக்கழக நிர்வாகத்தால் கடுமையாக சாடப்பட்டார். மேலும், குறிப்பிட்ட அந்த மாணவருக்கு 2 ஆண்டுகள் தடை விதிப்பதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.
இந்த தகவல்களால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். மேலும் அவர், 2 வருடங்களாக கஷ்டப்பட்டு படித்து முடித்து பட்டம் பெறுகின்ற உற்சாகத்தில் விழா மேடையில் தம்படம் எடுத்ததாகவும். அது தவறு என தனக்கு தெரியாது என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
இதற்கிடையே 2 ஆண்டுகள் தடையை மாணவ பிரதிநிதிகளின் குழுவினர் முற்றிலும் மறுத்துள்ளனர். பட்டம் பெற்று முடித்த ஒருவருக்கு எப்படி தடை விதிக்க முடியும். ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள், இது தொடர்பாக பல்கலைக்கழக துணை வேந்தரிடமும் விளக்கம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.