டப்ளின், மே 25 – ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்தை சட்டப்படி அங்கீகரிக்கும் முதல் நாடாக அயர்லாந்து அமைந்துள்ளது. கிறிஸ்தவ நாடான அயர்லாந்தில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்தை சட்டப்படி அங்கீகரிப்பதா வேண்டாமா என்பது குறித்து மக்களிடையே கடந்த சனிக்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் 62 சதவீதம் பேர் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். வாக்களித்தவர்களில் 12 லட்சத்து ஆயிரத்து 607 பேர் ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்தை சட்டப்படி அங்கீகரிக்குமாறும், 7 லட்சத்து 34 ஆயிரத்து 300 பேர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வாக்களித்துள்ளனர்.
இதன் மூலம் ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்தை சட்டப்படி அங்கீகரிக்கும் முதல் நாடாக அயர்லாந்து ஆகியுள்ளது. அயர்லாந்து மக்கள் பிரிவினைவாதத்திற்கு மரண அடி கொடுத்துள்ளதாக அந்நாட்டு துணை பிரதமர் ஜோவன் பர்டன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டப்ளின் ஆர்ச்பிஷப் மார்டின் கூறுகையில், “இந்நாளில் ஓரினச்சேர்க்கையாளர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இது ஒரு சமுதாய புரட்சி ஆகும்”.
“திருமணத்தின் அர்த்தத்தை மாற்றிவிடாமல் ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமை மதிக்கப்பட வேண்டும்” என்றார். ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்தை சட்டப்படி ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று ஆர்ச்பிஷப் வாக்களித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.