கோலாலம்பூர், ஜூன் 3 – வெளிநாட்டில் குறுகியகால விடுமுறையைக் கழித்த பின்னர் நாடு திரும்பிய துணைப் பிரதமர் மொய்தீன் யாசினை அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வரவேற்பு அளிப்பர் என்றும் அதனால் அம்னோவில் தலைமைத்துவப் போராட்டம் தொடங்கும் என்றும் கூறப்பட்ட ஆரூடங்கள் பிசுபிசுத்தன.
நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு நாடு திரும்பிய அவருக்கு சுமார் 30 பேர் மட்டுமே ஒன்று கூடி வரவேற்பு அளித்தனர். அப்போது “மலேசியாவைக் காப்பாற்றுங்கள்” என்றும், “டான்ஸ்ரீ நீடூழி வாழ்க” என்றும் அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
முன்னதாக டான்ஸ்ரீ மொய்தினை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் விமான நிலையத்தில் பெருந்திரளாகக் கூடுவர் என எதிர்பார்க்கப்பட்டது.
குறிப்பாக சமூக வலைத் தளங்கள் மற்றும் செல்பேசி குறுஞ்செய்திகள் வழி அவரது ஆதரவாளர்களை விமான நிலையத்தில் நேற்றிரவு ஒன்றுதிரட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் பரவியது. இதனால் அம்னோ வட்டாரங்களில் ஒருவித பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இதற்கிடையே, விமான நிலையத்தில் மொய்தின் யாசினை சூழ்ந்து கொண்ட செய்தியாளர்கள், 1எம்டிபி விவகாரத்தில் தன்னுடைய நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி கொண்ட அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து வெளியேறலாம் என்று பிரதமர் நஜிப் கூறியதாக வெளியான தகவல் குறித்து கருத்து தெரிவிக்குமாறு கேட்டனர்.
இதற்கு தம்மால் பதிலளிக்க இயலாது என்று உறுதிபடத் தெரிவித்தார் மொய்தின். அவரது விடுமுறை எவ்வாறு இருந்தது? என்ற மற்றொரு கேள்விக்கு, “நன்றாக இருந்தது,” என்று கூறினார்.
இதையடுத்து செய்தியாளர்கள் எழுப்பிய மற்ற கேள்விகள் எதற்கும் பதிலளிக்காமல் மொய்தின் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
நேற்று மொய்தினை வரவேற்க விமான நிலையத்தில் கூடவிருக்கும் ஆதரவாளர்கள் கூட்டத்தின் மூலம் அம்னோவில் ஏற்பட்டுள்ள பிளவு வெளிப்படையாகத் தெரியவரும் என அரசியல் ஆய்வாளர் அஸ்பான் அலியாஸ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.