கோத்தா கினபாலு, ஜூன் 6 – சபாவில் நேற்று காலை ஏற்பட்ட 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதத்தில், கோத்தா கினபாலு மலையில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக்கானோர் சிக்கிக் கொண்டனர்.
அதில் பெரும்பாலானவர்கள் மலேசியர்களும், சிங்கப்பூரைச் சேர்ந்தவர்களும் ஆவர் கினபாலு சிகரத்தின் உச்சியில் 190 பேர் சிக்கியுள்ளதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், இவர்களில் 40 பேரின் நிலை குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை.
அந்த 40 பேர் கொண்ட குழுவில் சிங்கப்பூர் தஞ்சோங் காட்டோங் பள்ளியைச் சேர்ந்த 8 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் அடங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதனிடையே, தஞ்சோங் காட்டோங் பள்ளியைச் சேர்ந்த 12 வயது சிங்கப்பூர் மாணவியின் சடலத்தையும் , மலை வழிகாட்டியான ராபி சப்பிங்கி (30) என்பவரின் சடலத்தையும் மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர்.
தற்போது மற்றவர்களைத் தொடர்பு கொள்ளவும், மலை உச்சியில் சிக்கியுள்ளவர்களை மீட்கவும் அரசாங்கம் மீட்புக் குழுக்களை அனுப்பி வருகின்றது.
இந்நிலையில், சிங்கப்பூர் மாணவர்களின் பெற்றோர்கள், கல்வி அமைச்சு, சிங்கப்பூர் காவல்துறை ஆகிய குழுவினரோடு சிங்கப்பூர் விமானப் படையைச் சேர்ந்த விமானம் ஒன்று கோத்தா கினபாலுவிற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.