குண்டாசாங் (சபா), ஜூன் 7 – இன்று மத்தியான வேளையில் சபா நிலநடுக்க சேதங்களைப் பார்வையிட கினபாலு பூங்கா வந்திருந்த துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன் யாசினும் அவரது குழுவினரும் மீண்டும் சிறிய அளவில் நிகழ்ந்த நில அதிர்வினால் பாதிக்கப்பட்டனர்.
நில அதிர்வினால் வெளியேற்றப்படும் மொய்தீன் யாசின்
அவர்கள் இன்று மதியம் 1.35 மணியளவில் ‘லிவாகு’ என்ற பெயர் கொண்ட ஒரு கட்டிடத்தின் உள்ளே இருந்தபோது, அவர்களுக்கு மீட்புக் குழுவினர் தேடுதல், மீட்புப் பணிகள் குறித்து விளக்கமளித்துக் கொண்டிருந்தனர். அப்போது லேசான நில அதிர்வுகள் உணரப்பட்டது.
உடனே, விளக்கமளிப்பு நிறுத்தப்பட்டு, மொய்தீனும் பிரமுகர்களும் உடனடியாக அந்தக் கட்டிடத்தில் இருந்து வெளியே அப்புறப்படுத்தப்பட்டனர். மொய்தீனின் பாதுகாவலர்கள் உடனடியாக அவரைப் பாதுகாப்பாக வெளியே அழைத்துச் சென்றனர்.
அப்போது அவருடன் சபா முதல்வர் டத்தோஸ்ரீ மூசா அமான், துணை முதலமைச்சர் டான்ஸ்ரீ ஜோசப் பைரின் கித்திங்கான், வீடமைப்பு உள்ளாட்சி அமைச்சர் டத்தோ அப்துல் ரஹ்மான் டஹ்லான், பாஸ் கட்சித் தலைவர் டத்தோ அப்துல் ஹாடி அவாங் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் கட்டிடத்திற்கு வெளியே துணைப் பிரதமருக்கு விளக்கமளிப்பு தொடர்ந்தது.
கட்டிடத்திற்கு வெளியே பாதுகாப்பாக கொண்டுவரப்பட்ட மொய்தீன் பத்திரிக்கையாளர்களிடம் உரையாடுகின்றார்
பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மொய்தீன் நிலநடுக்கத்தில் மரணமடைந்தவர்களுக்கு தலா பத்தாயிரம் ரிங்கிட்டும், காயமடைந்தவர்களுக்கு தலா இரண்டாயிரம் ரிங்கிட்டும் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
கினபாலு மலையில் சிக்கிக் கொண்டு மீட்கப்பட்டவர்கள், அதிர்ச்சிப் பாதிப்புகளுக்கு உள்ளாகியவர்களுக்கு தலா ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும் என்றும் மொய்தீன் அறிவித்தார்.
படங்கள்: EPA