ஜெய்ப்பூர், ஜூன் 13 – ராஜஸ்தான் மாநிலத்தில் பேருந்து மீது உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததில் 25 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பசேடா பகுதியில் திருமணத்திற்கு வந்தவர்களை ஏற்றி கொண்டு, தனியார் பேருந்து ஒன்று மோர்லா கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
டோங்க் மாவட்டம் பச்சீவர் என்ற இடத்தின் அருகே அந்த பேருந்து வந்த போது, உயர் அழுத்த மின்சாரம் சென்று கொண்டிருந்த, மின் கம்பி ஒன்று அறுந்து அதன் மீது விழுந்தது.
இந்த எதிர்பாராத சம்பவத்தில் அந்த பேருந்தில் பயணம் செய்தவர்களில் 25 பேர் மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து பலியாகினர். மேலும் 30 பேர் உடல் கருகி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும், என காவல் துறை கண்காணிப்பாளர் தீபக் குமார் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே, தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எரிசக்தி துறையின் சார்பில் 5 லட்சம் ரூபாய் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.