நெய்வேலி, ஜூன் 18 – ‘காம்ப்ளான்’ குடித்த 2 சிறுவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் அருகே மேல்பாதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் என்பவர், அருகில் உள்ள மருந்துக்கடையில் ‘காம்ப்ளான்’ வாங்கியுள்ளார்.
இதனை தனது, இரு மகன்களுக்கும் பாலில் கலந்து கொடுத்தார். அதனைக் குடித்த சிறிது நேரத்தில் சிறுவர்கள் இருவருக்கும் வாந்தி ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பாலமுருகன் தனது மகன்கள் இருவரையும் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
சிறுவர்களைப் பரிசோதனை செய்த மருத்துவர், சிறுவர்கள் குடித்த பாலில் கலக்கப்பட்ட பொருளால் தான் இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதைக் கேட்டு, பாலமுருகன் உடனடியாக வீட்டிற்கு வந்து, காம்ப்ளான் மாவை எடுத்துப் பார்த்தார்.
அப்போது அதில் அதிக அளவில் புழுக்கள் மற்றும் வண்டுகள் நெளிந்தன. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிக்குத் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் உணவுப் பாதுகாப்பு அதிகாரி சம்பந்தப்பட்ட மருந்துக் கடைகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், நெய்வேலி ஆர்ச்கேட் அருகே மாருதி நகரில் உள்ள காம்ப்ளான் நிறுவனத்திற்கு நேரில் சென்று அங்கு காலாவதியான காம்ப்ளான் பொருட்கள் இருக்கிறதா என்று ஆய்வு செய்தார். இதே போன்று கடலூர் போடிச்செட்டித் தெருவில் உள்ள காம்ப்ளான் கிடங்கிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
இதற்கிடையே, பாலமுருகன் வீட்டில் வாங்கி வைத்திருந்த ‘காம்ப்ளான்’ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள கிங்ஸ் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கிருந்து வரும் முடிவின் அடிப்படையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டுச் சட்ட விதிகளின்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.