ஜோகூர் பாரு, ஜூன் 16 – அனைவரையும் கட்டுப்படுத்த நீங்கள் ஒன்றும் கடவுள் இல்லையென ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் இப்னி சுல்தான் இப்ராஹிம், அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரியைக் கண்டித்துள்ளார். என்மீதான தாக்குதல்களைக் கொண்டுவாருங்கள் என்று துங்கு இஸ்மாயில் சைகை காட்டிக் கூறும் காணொளி ஒன்று இணையத் தளங்களில் பதிவேற்றம் கண்டதைத் தொடர்ந்து, நஸ்ரி முடிந்தால் எனக்கு நேரடியாகப் பதில் கூறுங்கள் என்று தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து நஸ்ரிக்கு நேரடிப் பதிலாகத் தனது அறிக்கையை ஜோகூர் பட்டத்து இளவரசர் வெளியிட்டுள்ளார்.
நாட்டு மக்கள் அரசியல்வாதிகளிடம் காரணமின்றிப் பதவியை ஒப்படைக்கவில்லை என்றும் மாறாக அவர்களுக்குச் சேவை வழங்கவே அவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அவர் அந்த அறிக்கையில் நினைவுபடுத்தினார்.
இதற்கு முன்னர், ‘மறைப்பதற்கு ஒன்றுமில்லை’ என்று கருத்தரங்கில் கலந்து கொள்ளாத பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை அவர் குறைகூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனை எதிர்த்துப் பண்பாடு, சுற்றுலா, கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ், அவருக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்து, சுல்தான்கள் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என்றும், மீறினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு மறுமொழி கூறும் வகையில் அறிக்கை விட்டிருந்த துங்கு மக்கோத்தா, தாம் யாரையும் பதவி விலக வற்புறுத்தவில்லை என்றும் மாறாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையைத் தான் நினைவுறுத்தியதாகக் குறிப்பிட்டார்.
தவறு நடந்தால் அதை யாரும் தட்டிக்கேட்க வேண்டுமென்றும், அது இங்கு நடைபெறுவதற்கான சாத்தியம் இல்லை என்றும், அமைச்சர்கள் தங்களை யாரும் தட்டிக்கேட்கக் கூடாதென்று நினைக்கின்றனர் என்றும் துங்கு இஸ்மாயில் மேலும் கூறியுள்ளார். தமது மக்களின் பிரதிநிதியாகவும், ஜோகூர் மக்களின் நலன் கருதியும் மேற்கண்ட அறிக்கையை விடுத்துள்ளதாகவும் துங்கு குறிப்பிட்டார்.
தாம் அரசியல்வாதி அல்ல என்றும், அல்லாவுக்கும், சுல்தானுக்கும், ஜோகூர் மக்களுக்கும் கட்டுப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டதோடு, பொதுத்தேர்தலில் வாக்கு சேகரிக்கும் இடமாக ஜோகூர் கருதப்படக்கூடாதென்றும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
நஸ்ரி போன்றவர்கள் தேசிய பிரச்சனைகளைத் திசைதிருப்ப வேண்டாம் என்றும், நாடு தூய்மையான நேர்மைமிக்க தலைவர்களைத்தான் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.