Home நாடு தாய்லாந்தில் காலிட் அபு பக்கர்: ஜஸ்டோவிடம் விசாரணை?

தாய்லாந்தில் காலிட் அபு பக்கர்: ஜஸ்டோவிடம் விசாரணை?

694
0
SHARE
Ad

Xavier Andre Justoகோலாலம்பூர், ஜூலை 24 – பெட்ரோ சவுதி நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் சேவியர் ஜஸ்டோவிடம் விசாரணை நடத்தும் பொருட்டு ஐஜிபி டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் பாங்காக் சென்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தாய்லாந்து அரச காவல்படை ஆணையர் ஜெனரல் சோம்யோட் பம்புன் முவாங்கை, அவர் சந்தித்துப் பேசியதாகவும், ஜஸ்டோவிடம் விசாரணை நடத்த துணை புரியுமாறு அவர் கேட்டிருக்கலாம் என்றும் தாய்லாந்து வட்டாரங்கள் தெரிவித்ததாக ‘தி ஸ்டார்’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், ஜஸ்டோவிடம் விசாரணை நடத்த மலேசிய காவல்துறைக்கு தாய்லாந்து காவல்துறை மீண்டும் அனுமதி மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே கடந்த 16ஆம் மலேசியத் தரப்பில் ஜஸ்டோவை சந்திக்க அனுமதி கேட்கப்பட்டபோது, அது நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

#TamilSchoolmychoice

இத்தகைய சூழ்நிலையில் தாய்லாந்து அரச காவல்படை ஆணையர் ஜெனரல் சோம்யோட் பம்புன்முவாங்கை, நேற்று வியாழக்கிழமை காலிட் அபுபாக்கர் சந்தித்து மீண்டும் அதே கோரிக்கையை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, ஜஸ்டோ மலேசியர் அல்ல என்பதால், அவரைப் பற்றிய தகவல்களைப் பெற மலேசிய காவல்துறை தனது வெளியுறவு அமைச்சர் மற்றும் அட்டர்னி ஜெனரல் மூலமாக முறைப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஜெனரல் சோம்யோட் பம்புன்முவாங் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் காலிட் அபுபாக்கர் தாய்லாந்து சென்றிருப்பது குறித்து புக்கிட் அமான் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

தாய்லாந்து காவல்துறை ஒப்புக்கொள்ளும் பட்சத்தில், தனது தலைமையில் ஒரு குழு அங்கு சென்று ஜஸ்டோவிடம் விசாரணை மேற்கொள்ளும் என காலிட் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் பேங்காக் சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே ஜஸ்டோ மீது மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. அவருக்கு தண்டனை விதிக்கப்படும் பட்சத்தில், சிறைவாசம் அனுபவித்த பிறகே சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த அவர் நாடு கடத்தப்படுவார்.

பெட்ரோ சவுதி நிறுவனத்தின் முன்னாள் செயலரான, சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஜஸ்டோ, தனது நிறுவனத்தை மிரட்டிய குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஜூன் 22ஆம் தேதி தாய்லாந்தில் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக அவர் தன்னிடம் உள்ள சில முக்கியமான ஆவணங்களை ஒப்படைப்பது குறித்து மலேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலருடனும், ஊடக உரிமையாளர் ஒருவருடனும் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை எல்லாம் ஜஸ்டோ சிங்கப்பூரில் சந்தித்துப் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.