Home நாடு திருமண – மணவிலக்கு சட்டத்திருத்த மசோதா மீட்பு – இந்துதர்ம மாமன்றம் அதிருப்தி!

திருமண – மணவிலக்கு சட்டத்திருத்த மசோதா மீட்பு – இந்துதர்ம மாமன்றம் அதிருப்தி!

1081
0
SHARE
Ad

mhdmகோலாலம்பூர் – ஒருதலைப்பட்ச முறையிலான மதமாற்றப் பிரச்சனைக்குத் தீர்வாக 2016-ம் ஆண்டு அமைக்கப்பட்ட திருமண – மணவிலக்கு சட்டத்திருத்த மசோதாவை அரசாங்கம் திடீரென மீட்டுக் கொண்டது மிகுந்த அதிருப்தி அளிப்பதாக மலேசிய இந்துதர்ம மாமன்றம் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து இந்துதர்ம மாமன்றம் சார்பில் அதன் தேசியத் தலைவர் இராதாகிருஷ்ணன் அழகுமலை (படம்) வெளியிட்டிருக்கும் பத்திரிகை அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

MHDM President Mr.Radhakrishnan Alagamalai AMN“பிரதமர் துறை அமைச்சராக இருந்தபோது டத்தோஸ்ரீ நஸ்ரி அஸிஸ், இந்தச் சட்டத்திருத்தம் பல பிரச்சனைகளைத் தீர்க்கும் என்றும் அதனை அமல்படுத்த அரசு தீர்க்கமாக இருப்பதாகவும் உறுதியளித்திருந்தார். எனினும், தற்போது பலமுள்ள அரசே சட்டத் திருத்தத்தைத் தாக்கல் செய்ய முடியும் என நம்பிக்கையில்லாக் கருத்தினை வெளியிட்டிருப்பது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.”

#TamilSchoolmychoice

“சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளையும் கவனத்தில் கொண்டு அவர்களின் மதங்களுக்கு மதிப்பளித்து பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் அவர்களின் தலைமையிலான அரசாங்கம் திருமண மணவிலக்கு சட்டத்திருத்தம் செய்யச் சிறந்த ஒத்துழைப்பு நல்கும் எனப் பெரும் நம்பிக்கையளித்து, திடீரெனப் பின்வாங்கியது பலரைப் பெருமளவில் பாதித்துள்ளது. இந்துக்கள் எதிர்நோக்கியுள்ள மதமாற்றப் பிரச்சனை குறித்த வழக்குகளுக்கு மாமன்றம் சட்ட ஆலோசனை நல்கி வருகிறது. அவ்வகையில் இச்சட்டத்திருத்தம் இப்பிரச்சனையைக் களையும் சிறந்த முடிவாக அமையும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.”

“எதிர்க்கட்சிகள் தங்களின் வாக்குறுதிக்கு மாறாக வாக்களிப்பதிலிருந்து தவறினால் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானமாக இது கருதப்படும் என்ற வெறும் அனுமானத்தின் பேரில் மட்டும் அரசாங்கம் எடுத்திருக்கும் இம்முடிவு நீதி வழுவியிருப்பதாக உள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக ஒருதலைப்பட்ச மதமாற்றத்தால் பிரிந்த தன் குழந்தையை மீட்கத் தவிக்கும் இந்திராகாந்தி போன்றோரின் போராட்டம் தற்போது விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது.”

“இந்தியர்களின் நம்பிக்கை நட்சத்திரமான பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் அவர்கள் திருமண – மணவிலக்கு சட்டம் திருத்தம் செய்யப்படும் எனக் கடந்த ஆகஸ்டு 2016-ல் வாக்குறுதி அளித்திருந்தார். அவ்வகையில் அவர் இச்சட்டத்திருத்தம் முறையாக இயற்றப்படுவதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மாமன்றம் கேட்டுக்கொள்கிறது.”

“மேலும், சமயச் சுதந்திரத்தை வலியுறுத்துவது கூட்டரசு அரசியலமைப்பு சட்டமாகும். இதில் விதி 88ஏ உட்பிரிவை உட்புகுத்துவது ஏற்றதொரு அம்சமாகும். ஆகவே, அவ்விதி உட்புகுத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஒருதலைப்பட்சமாக முடிவெடுக்கப்பட்டு மதமாற்றம் செய்யப்படுவது மற்ற மதத்தின்பால் வெறுப்பினையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தி ஒற்றுமையைச் சீர்க்குழைக்கும்.இதனைத் தவிர்க்க இச்சட்டத் திருத்தத்தில் பிரதமர் அவர்கள் தலையிட்டு அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என இராதாகிருஷ்ணன் அழகுமலை கேட்டுக் கொண்டிருக்கிறார்.