Home நாடு இந்திய உணவகங்கள் பிரச்சனை – தீர்த்து வைக்க வேதமூர்த்தி முயற்சி

இந்திய உணவகங்கள் பிரச்சனை – தீர்த்து வைக்க வேதமூர்த்தி முயற்சி

971
0
SHARE
Ad
பிரிமாஸ் பொறுப்பாளர்கள் வேதமூர்த்தியைச் சந்தித்து மனு வழங்குகின்றனர்

புத்ரா ஜெயா – மலேசியாவில் இயங்கி வரும் இந்திய உணவகங்கள் மற்றும் அதன் தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து விரைவில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடனும், பிரதமர் துன் மகாதீர் முகமதுவுடனும் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வுகள் காண முயற்சிகள் எடுக்கப் போவதாக பிரதமர் துறை அமைச்சர் செனட்டர் பொன்.வேதமூர்த்தி அறிவித்துள்ளார்.

மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தினர்(பிரிமாஸ்) நீண்ட காலமாக எதிர்கொண்டு வரும் தொழிலாளர் பற்றாக்குறைப் பிரச்சினை குறித்தும் பிரிமாஸ் உறுப்பினர்கள் தங்களின் தொழிலை நடத்துவதில் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களைப் பற்றியும் மனித வளத்துறை, உள்துறை அமைச்சர்களுடன் பேச இருப்பதாகவும் தேவைப்பட்டால் பிரதமர் துன் மகாதீரை சந்திக்க இருப்பதாகவும் பொன்.வேதமூர்த்தி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதன் தொடர்பில் கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி பிரிமாஸ் தலைவர் முத்துசாமி திருமேனி தலைமையில் செயலாளர் தனபாலன், சி. கிருஷ்ணன் உள்ளிட்ட பிரிமாஸ் நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன் பிரிமாஸ் மேலாண்மை மற்றும் பொது உறவு அதிகாரி பழ.கருப்பையா ஆகியோரை புத்ரா ஜெயாவில் தனது அமைச்சு அலுவலகத்தில் சந்தித்து அவர்களின் பிரச்சனைகள் குறித்தும் வேதமூர்த்தி கேட்டறிந்தார்.

#TamilSchoolmychoice

பிரிமாஸ் பொறுப்பாளர்கள் வேதமூர்த்தியுடனான சந்திப்பின்போது தங்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனுவை சமர்ப்பித்ததுடன் அவரிடம் நேரடியாகவும் தங்களின் நீண்ட காலப் பிரச்சினைகளை எடுத்துரைத்தனர்.

அரசு அனுமதி அளித்தாலும் இடையில் ஒருசில அதிகாரிகள் பாராமுகமா­க இருப்பதாகவும் அதனால், தொடர்ந்து வெளிநாட்டுத் தொழிலாளர் பற்றாக்குறை சிக்கலை எதிர்கொண்டிருப்பதாகவும் இந்த ஆண்டு தொடக்கத்தில்கூட 30,000 தொழிலாளர்களுக்கு அரசு அனுமதி அளித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் சில நூறு தொழிலாளர்களுக்கு மேல் தருவிக்க முடியவில்லை என்று அமைச்சரிடம் பிரிமாஸ் தலைவர் முத்துசாமி எடுத்துரைத்தார். “புதிய தொழிலாளர்களுக்கு அனுமதி அளிக்காவிடினும், பணியில் உள்ள தொழிலாளர் ‘பெர்மிட்’ முடிந்து சொந்த நாட்டிற்கு திரும்பும்பொழுது அவருக்குப் பதிலாக மாற்றுத் தொழிலாளரை அமர்த்திக் கொள்வதற்கு அனுமதித்தால்கூட எங்களின் பிரசிச்சினை ஓரளவிற்குத் தணியும்; அதற்கும் வாய்ப்பில்லை” என்றும் முத்துசாமி மேலும் கூறினார்.

தற்பொழுது பத்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மேலும் மூன்று ஆண்டுகள்வரை வேலை செய்ய அனுமதி அளித்துள்ள அரசு, ஒரு தொழிலாளிக்கு ஓர் ஆண்டுக்கு லெவிக் கட்டணமாக பத்தாயிரம் வெள்ளியை என அறிவித்துள்ளது. “நாட்டு மக்களின் சுமூகமான வாழ்க்கை நிலைக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் குறிப்பாக சுற்றுலாத் துறை மேம்பாட்டிற்கு உணவகத் தொழில் ஆற்றி வரும் பங்கு அளப்பறியது. அப்படி இருந்தும், இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள நாங்கள் காலமெல்லாம் சங்கடத்தில் சிக்கி இருப்பதைக் அரசாங்கம் கண்டு கொள்வதில்லை. நாடு முழுவதிலும் இருந்து பிரிமாஸ் உறுப்பினர்கள் தொழிலாளர் பிரச்சினை குறித்து எழுப்பும் புகாரை என்னால் சமாளிக்க முடியவில்லை” என்றும் முத்துசாமி சந்திப்பின்போது வேதனையுடன் எடுத்துரைத்தார்.

எனவே, புதிய அரசாங்கமாவது எங்களின் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டும் என்று பிரிமாஸ் தலைவரும் பொறுப்பாளர்களும் அமைச்சரிடம் கோரிக்கை வைத்த நிலையில், அவர்களின் கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட வேத மூர்த்தி, இதன் தொடர்பில் உள்துறை, மனிதவளத் துறை அமைச்சர்களை சந்தித்து உணவகத் தொழிலுக்கு ஒரு நல்லத் தீர்வு பிறக்க ஆலோசிக்க இருப்பதாகவும் தேவைப்பட்டால் பிரதமரின் ஆலோசனையும் நாடப்படும் என்று தெரிவித்தார்.

இதற்கிடையில் உள்நாட்டுத் தொழிலாளர்களை உணவகத் தொழிலில் ஈடுபடுத்தும் முயற்சியை பிரிமாஸ் தொடர்ந்து மேற்கொள்ளும் என்று தெரிவித்த முத்துசாமி திருமேனியின் கருத்தை வேதமூர்த்தி பெரிதும் வரவேற்றதுடன் வெளிநாட்டுத் தொழிலாளர்களை சார்ந்திருப்பதைக் குறைக்க எண்ணம் கொண்டுள்ள புதிய அரசாங்கத்தின் கொள்கைக்கு இந்த முயற்சி துணை புரியும் என்று குறிப்பிட்டதுடன் பிரிமாஸ் தலைவரையும் பொறுப்பாளர்களையும் பாராட்டினார்.