Home நாடு சீ பீல்ட் ஆலயம் : “பாகுபாடின்றி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” – சேவியர் ஜெயகுமார்

சீ பீல்ட் ஆலயம் : “பாகுபாடின்றி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” – சேவியர் ஜெயகுமார்

892
0
SHARE
Ad

புத்ரா ஜெயா –  சுபாங் ஜெயா சீ பீல்ட் மகா மாரியம்மன்  ஆலய இடம் மாற்று விவகாரத்தில் அனைவரும் மிகப் பொறுப்புடன் செயல்படவேண்டும் என்றும் குறிப்பாக, காவல் துறையினர் இவ்விகாரத்தில் எந்தப் பாகுபாடுமின்றி நீதியாகச் செயல்பட வேண்டும் எனவும் பிகேஆர் கட்சியின் தேசிய உதவித் தலைவரும் கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

“பொதுமக்கள் தாங்கள் கண்ணால் கண்டதை அப்படியே காவல் துறையில் புகாராக அளித்துச் சட்டம் அதன் கடமையைச் செய்ய அனுமதிக்க வேண்டும். மலேசியா ஒரு பல இன மக்கள் வாழும் ஒரு அமைதியான நாடு, நமக்குள் ஏதும் கருத்து வேறுபாடுகள், பிணக்கு இருந்தால் அதனை முறையாகத் தீர்த்துக் கொள்ள நமக்குப் பல வழி வகைகள் உண்டு. அதில் சட்டரீதியான தீர்வும் அடங்கும். வன்செயல்கள் வழி இது நாள் வரை மலேசியர்கள் கட்டிகாத்த தேசத்தை நீர்மூலமாக்க எவரையும் அனுமதிக்க முடியாது” என்றும் சேவியர் கூறினார்.

“இந்த ஆலயத்தின் விவகாரம் சிலாங்கூர் மாநிலத்தில் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி அமைவதற்கு முன்பே நீதிமன்றத்தை அணுகி, தீர்ப்பு பெறப் பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநில அரசும் நீதிமன்றத் தீர்ப்பின் படியே அனைத்துத் தரப்பின் ஒப்புதலையும் பெற்று, கோவிலை மீண்டும் நிர்மாணிக்க மாற்று நிலமாக ஒரு ஏக்கர் நிலத்தையும் ஒரு மில்லியன் வெள்ளியையும் வழங்க மேம்பாட்டாளரை நிர்ப்பந்தித்தது. அந்தத் தொகை இப்பொழுது 1.5 மில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அறிகிறோம். இருப்பினும் அதில், உடன்பட முடியாத ஒரு சிலர், என்னைக் குற்றம் சொன்னதால் அவர்கள் சிறந்த முடிவை எடுக்கும் வண்ணம், நான் ஒதுங்கிக் கொண்டேன்” என்றும் பத்திரிக்கை அறிக்கை ஒன்றில் சேவியர் ஜெயகுமார் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“இதுநாள் வரை ஜனநாயக நீதியான அமைதியான போராட்டமாக இருந்தது, ஏன் வன்செயலாக மாறியது? இத்தனை ஆண்டுகள் கட்டுக்கோப்பாக நடந்த போராட்டம் வெறித்தனமாக ஏன் மாறியது? யார் மாற்றியது, என்பது போன்ற அம்சங்கள் மீது காவல் துறையினர் சரியான விசாரணை நடத்த வேண்டும். குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் சேவியர் காவல் துறையினரைக் கேட்டுக் கொண்டார்.

“இன்று, வெளியாரின் தலையீட்டால் நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் செல்வதால், ஓர் ஆலய விவகாரம் நாட்டைச் சீர்குலைக்கும் நிலைக்கு இட்டுச் செல்வதைப் பாராமல் இருக்க முடியாது. இத்தனை ஆண்டுகள் அனைத்துச் சாராரும் காட்டிய பொறுமையை அர்த்தமற்றதாக்கச்   செய்யும் வன்முறைகள் மீது சரியான விசாரணை வேண்டும். காவல் துறையினர் எந்தப் பாகுபாடுமின்றித் தக்க விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் சேவியர் மேலும் கேட்டுக் கொண்டார்.

“இம்மாதிரி நேரங்களில் நம் மக்கள் அமைதி காக்க வேண்டும், கண்ணாடி வீடுகளில் இருந்துக் கொண்டு கல்வீசுவதற்கு ஒப்பாகும், ஒருவருக்கு – ஒருவர் எதிர்வினையாடுவது. அதனால் அனைவரும் சட்டம் அதன் கடமையை செய்ய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றும் சேவியர் தனதறிக்கையில் கேட்டுக்கொண்டார்.