சென்னை, ஜூலை 10 – தமிழகப் பாரதிய ஜனதா கட்சித் தலைவி தமிழிசை சௌந்தரராஜன் நேற்று மதுக்கடைகளுக்குப் பூட்டுப் போடும் போராட்டத்தின் போது அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென மாநில பாஜக வலியுறுத்தி வருகிறது. இக்கோரிக்கைக்காக இன்று மாநிலம் தழுவிய அளவில் மதுக்கடைகளுக்குப் பூட்டு போடும் போராட்டம் நடைபெறும் என்று தமிழிசை (படம்) முன்பே அறிவித்திருந்தார்.
அதன்படி நேற்று காலை பாரதிய ஜனதா தொண்டர்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் முன்பு குவிந்தனர். மதுக்கடைகளை மூட வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பிய பாஜகவினர் அவற்றுக்குப் பூட்டுப் போட முயன்றனர்.
இதையடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தடுத்து நிறுத்திய காவல்துறை அனைவரையும் கைது செய்தது. இந்த வகையில் சென்னை வடபழனி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினருக்கு மாநிலத் தலைவி தமிழிசை தலைமையேற்றார்.
அப்போது அவர் அப்பகுதியில் உள்ள மதுக்கடைக்குப் பூட்டுபோட முயன்றபோது, காவல்துறையினர் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். பொதுவாகப் போராட்டங்களில் ஈடுபடும்போது இவ்வாறு ஓரிடத்தில் கைது செய்யப்படும் முக்கிய அரசியல் பிரமுகர்களை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விடுவிப்பது வழக்கம்.
ஆனால் தமிழிசை விஷயத்தில் அந்த நடைமுறை கடைபிடிக்கப்படாததால் பாஜகவினர் மத்தியில் பரபரப்பு நிலவியது.