Home நாடு தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (4) : லாபிஸ்

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (4) : லாபிஸ்

1430
0
SHARE
Ad
Chua-Tee-Yong-labis MP
சுவா தி யோங் – லாபிஸ் நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினர்

(2013-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்று இந்த 14-வது பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற தேசிய முன்னணி பெரும் சவாலை எதிர்நோக்கப் போகும் தொகுதிகளின் வரிசையைத் தனது பார்வையில் வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

1982-ஆம் ஆண்டு வரை அம்னோவின் கோட்டையாக – அக்கட்சியின் கைவசம் இருந்த தொகுதி ஜோகூர் மாநிலத்தின் லாபிஸ் நாடாளுமன்றத் தொகுதி.

ஒரு காலத்தில் முன்னாள் துணைப் பிரதமர் துன் மூசா ஹீத்தாம் அவர்களே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தொகுதி. பின்னர் மசீசவின் தலைவராக இருந்த லிங் லியோங் சிக் தொடர்ந்து தற்காத்து வந்த தொகுதி.

#TamilSchoolmychoice

ஆனால், 2013-இல் தட்டுத் தடுமாறி வெறும் 353 வாக்குகள் பெரும்பான்மையில்தான் இந்தத் தொகுதியை தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட மசீசவின் சுவா தி யோங் வெல்ல முடிந்தது.

சுவா தி யோங் தற்போது அனைத்துலக வாணிப தொழிலியல் அமைச்சில் துணை அமைச்சராக பதவி வகிக்கிறார்.

Chua Soi Lek
சுவா சொய் லேக் – முன்னாள் மசீச தலைவரான இவர் நடப்பு லாபிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுவா தி யோங்கின் தந்தையுமாவார்.

இவரது தந்தைதான் சுவா சொய் லெக், மசீசவின் முன்னாள் தேசியத் தலைவர். ஓர் ஆபாச காணொளி (வீடியோ) விவகாரத்தில் சிக்கி பதவியை விட்டு விலகிய சுவா சொய் லெக் 2004-ஆம் ஆண்டில் லாபிஸ் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.

அதைத் தொடர்ந்து தான் பதவி விலக வேண்டியிருந்த காரணத்தால் தனக்குப் பதிலாகத் தனது மகன் சுவா தி யோங்கிற்கு லாபிஸ் தொகுதியைப் பெற்றுத் தந்தார். மகனும் 2008 பொதுத் தேர்தலில் அரசியல் சுனாமி அடித்த காலகட்டத்திலும் 4,094 வாக்குகள் பெரும்பான்மையில் லாபிஸ் தொகுதியில் வெற்றி பெற்றார்.

ஆனால், அந்தப் பெரும்பான்மை 2013-இல் 353 ஆக சுருங்கியது ஏன்?

2011 – தெனாங் சட்டமன்ற இடைத் தேர்தல்

லாபிஸ் நாடாளுமன்றத் தொகுதியில் ஏற்பட்ட வாக்காளர்களின் மனநிலை மாற்றத்தைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால் லாபிஸ் தொகுதியின் கீழ் வரும் தெனாங் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் குறித்து ஒரு சில விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

லாபிஸ் தொகுதியின் கீழ் வரும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் – தெனாங் மற்றும் பெக்கோக் ஆகும்.

தெனாங் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அம்னோவின் டத்தோ சுலைமான் தஹாவின் அகால மரணத்தால் 2011 ஜனவரியில் அந்தத் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்றது.

ramakrishan-former-senator
2013-இல் ஜசெக சார்பில் லாபிஸ் தொகுதியில் போட்டியிட்ட எஸ்.இராமகிருஷ்ணன்

ஜசெக வட்டாரங்களில் ஒரு சுவாரசியமான தகவலைக் கூறுவார்கள். ஜசெகவின் இந்தியத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் செனட்டருமான எஸ்.இராமகிருஷ்ணன் பற்றிய தகவல் அது.

இந்த தெனாங் இடைத் தேர்தலில் பணியாற்றச் சென்றவர்களில் சிலாங்கூர் ஜசெகவைச் சேர்ந்த இவர் அப்போதுதான் முதன் முறையாக தெனாங் வட்டாரத்திற்குச் சென்று இடைத் தேர்தலில் களப்பணி ஆற்றிய விதத்தில் லாபிஸ் தொகுதியைப் பற்றியும் அங்குள்ள இந்திய வாக்காளர்கள் குறித்தும் நன்கு அறிந்து கொண்டார்.

இடைத் தேர்தலில் அம்னோவே மீண்டும் வென்றாலும், அந்த இடைத் தேர்தல் அனுபவத்தைக் கொண்டு லாபிஸ் தொகுதியில் தொடர்ந்து பணியாற்றி அங்குள்ள இந்திய வாக்காளர்களிடத்திலும் சமூக இயக்கங்களிடத்திலும் அணுக்கமான தொடர்புகளை வளர்த்துக் கொண்டார் இராமகிருஷ்ணன்.

விளைவு?

அடுத்து இரண்டாண்டுகளில் 2013-இல் வழக்கமாக சீன வேட்பாளர்களையே லாபிஸ் தொகுதியில் களமிறக்கி வந்த ஜசெக தலைமைத்துவம் இந்த முறை ஒரு மாற்றாக இராமகிருஷ்ணனையே வேட்பாளராக நிறுத்தியது.

2013 பொதுத் தேர்தல் முடிவுகள்

labis-parliament-2013-resultsஅந்த வியூகமும் வெற்றியளித்தது. 2013 பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தாலும், வாக்குகள் பெரும்பான்மையை 353-ஆக வெற்றிகரமாகக் குறைத்தார் இராமகிருஷ்ணன்.

தற்போது மீண்டும் லாபிஸ் தொகுதியில் ஜசெக சார்பில் தேர்தல் பணிகளை அயராது மேற்கொண்டு வரும் இராமகிருஷ்ணன், ஜோகூர் மாநில ஜசெகவின் துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இவரது கடந்த காலப் பணிகள் – தொகுதியில் கொண்டிருக்கும் அனுபவங்கள் – காரணமாக மீண்டும் இவரே இங்கு வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற ஆரூடங்கள் ஜசெக வட்டாரங்களில் வலுத்து வருகின்றன.

2013 புள்ளி விவரங்களின்படி சுமார் 37,715 வாக்காளர்களைக் கொண்ட இந்தத் தொகுதியில் சுமார் 47 விழுக்காடு சீன வாக்காளர்களும், 36 விழுக்காடு மலாய் வாக்காளர்களும் 15 விழுக்காடு இந்திய வாக்காளர்களும் இருக்கின்றனர். எனவே லாபிஸ் தொகுதியின் தலைவிதியை நிர்ணயிக்கக் கூடியவர்களாக இந்திய வாக்காளர்கள் திகழ்கின்றனர்.

மீண்டும் ஜசெக போட்டி

DAP-LOGO-SLIDERநேற்று வெளியிடப்பட்ட பக்காத்தான் ஹரப்பான் தொகுதி பங்கீடுகளின்படி லாபிஸ் மீண்டும் ஜசெகவுக்கே ஒதுக்கப்பட்டிருக்கிறது.

ஜசெகவுக்கு பாரம்பரியமாக வாக்களிக்கும் சீனர்களோடு, இராமகிருஷ்ணன் போன்ற இந்திய வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால், இந்திய வாக்காளர்களும் அதில் சேர்ந்து கொள்ள, தேசிய முன்னணி மீண்டும் இங்கே வெல்வது மிகுந்த சிரமமாக இருக்கும்.

போதாக் குறைக்கு, இந்த முறை ஜோகூர் மாநிலத்தை முதன்மை போராட்ட மாநிலமாக முன்னிறுத்திக் கைப்பற்ற ஜசெகவும், பக்காத்தான் ஹரப்பான் எதிர்க்கட்சிக் கூட்டணியும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.

Tan-Sri-Muhyiddin-Yassin2-1
டான்ஸ்ரீ மொகிதின் யாசின்

டான்ஸ்ரீ மொகிதின் யாசினின் ஆதரவும் ஜோகூர் மாநிலத்தில் கணிசமாக இருப்பதால் இந்த முறை அவர் சார்ந்திருக்கும் பெர்சாத்து கட்சியின் கூட்டணியால் ஜசெகவுக்கு மலாய் வாக்காளர்களிடத்திலும் கூடுதல் வாக்குகள் கிடைக்கக் கூடும்.

லாபிஸ் தொகுதியில் தேசிய முன்னணிக்கு எதிராக விசுவரூபமெடுத்து நிற்கும் மற்றொரு அம்சம் பெல்டா நிலத்திட்ட வாக்குகள். பெல்டாவில் அண்மையக் காலமாக எழுந்து வரும் ஊழல் புகார்களினால் பெல்டா நிலக் குடியேற்றத்திலுள்ள வாக்காளர்கள் தேசிய முன்னணிக்கு எதிராக வாக்களிப்பார்கள் எனக் கருதப்படுகிறது.

லாபிஸ் தொகுதியில் சில பெல்டா நிலத் திட்டங்கள் இருப்பதால் அந்த வாக்காளர்களைக் கவர வேண்டிய நிர்ப்பந்தமும் தேசிய முன்னணிக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஜோகூர் மாநிலத்தில் பாஸ் கட்சியின் ஊடுருவல் அதிகமில்லை என்பதால், இங்கே பாஸ் தனித்துப் போட்டியிடுமா? அதனால் வாக்குகள் பிரியுமா? என்பது போன்ற ஐயப்பாடுகள் எழவும் வாய்ப்பில்லை.

எனவே, தேசிய முன்னணிக்கு ஆபத்தான தொகுதிகளில் லாபிஸ் தொகுதியும் ஒன்று என்பதை இதற்கு மேல் விளக்கத் தேவையில்லை!

-இரா.முத்தரசன்

தொடர்புடைய முந்தைய கட்டுரைகளின் இணைப்புகள்:

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (1) : பெந்தோங்

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (2): தெலுக் இந்தான்

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (3) – கோல சிலாங்கூர்