கோலாலம்பூர் – பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு எதிரான ஓரினப் புணர்ச்சி வழக்கில் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞராகச் செயல்பட்ட வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லாவுக்கு நஜிப் துன் ரசாக் 9.5 மில்லியன் ரிங்கிட் செலுத்தினார் என்ற குற்றச்சாட்டுகளில் தற்போது புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக, அன்வாரின் வழக்கறிஞர் ராம்கர்ப்பால் சிங் (படம்) தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, அன்வாருக்கு எதிரான வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராகச் செயல்பட்டதில் ஷாபி அப்துல்லாவுக்கு உள்நோக்கமும், தனிப்பட்ட நலனும் இருந்தது என்பதையும் இந்தப் புதிய ஆதாரம் காட்டுவதாக ராம் கர்ப்பால் சிங் கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் தான் 9.5 மில்லியன் ரிங்கிட் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஷாபி அப்துல்லா அடிப்படையற்றவை என மறுத்து வந்தார்.
“தனியார் வழக்கறிஞரான ஷாபி அப்துல்லாவை அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்க சட்டம் இடமளிக்கிறது என்றாலும், அத்தகைய வழக்கறிஞர்கள் நேர்மையுடனும், பாரபட்சமின்றியும் செயல்பட வேண்டும். எந்தவித சந்தேகங்களும் இருக்கக் கூடாது. அவ்வாறு அவர்கள் உள்நோக்கத்தோடு செயல்பட்டால் அவர்கள் நடத்தும் வழக்கின் முடிவையும் அது பாதிக்கும்” என்றும் ராம் கர்ப்பால் கூறியிருக்கிறார்.