Home One Line P1 “பெஜூவாங்” புதிய கட்சிக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது

“பெஜூவாங்” புதிய கட்சிக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது

595
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : துன் மகாதீர் தொடங்கியிருக்கும் புதிய அரசியல் கட்சி “பார்ட்டி பெஜூவாங் தானா ஆயர்” (பெஜூவாங்). இதற்கான அதிகாரபூர்வ விண்ணப்பம் இன்று (ஆகஸ்ட் 19) இங்குள்ள சங்கப் பதிவிலாகா தலைமையகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

கட்சியின் அவைத் தலைவராகப் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் தலைமையிலான குழுவினர் இந்த விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தனர். சங்கப் பதிவிலாகாவின் தலைமை இயக்குநர் மஸ்யாத்தி அபாங் இப்ராகிமிடம் இந்த விண்ணப்பம் வழங்கப்பட்டது.

“எங்களின் கட்சி கூடிய சீக்கிரம் பதிவுபெறும் என்றும் அதன் மூலம் நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பில் நாங்களும் இடம் பெற முடியும் என்றும் நம்புகிறோம்” என முக்ரிஸ் மகாதீர் பின்னர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

”தாய் மண்ணிற்காகப் போராடும் மாவீரர்கள்” என்ற பொருளில் இந்தக் கட்சியின் பெயர் மலாய் மொழியில் சூட்டப்பட்டுள்ளது. மலாய் கட்சியாகவும் இந்தக் கட்சி செயல்படும்.

மகாதீர் தொடக்கிய பெர்சாத்து கட்சியிலிருந்து அவரது அணியினர் மொகிதின் யாசின் அணியினரால் நீக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து தொடரப்பட்ட வழக்கில் மகாதீர் தரப்பு தங்களின் உறுப்பியத்தை மீண்டும் நிலைநாட்டுவதில் தோல்வி கண்டனர்.

அந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து மகாதீர் பெஜூவாங் என்ற கட்சியைத் தொடங்குவதாக அறிவித்தார். பெர்சாத்து தங்களிடமிருந்து “கடத்தப்பட்டு” தற்போது ஊழல்வாதிகளுடன் இணைந்து விட்டதாகவும் மகாதீர் சாடினார்.

மகாதீருடன் இணைந்து செயல்படும் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெஜூவாங் கட்சியில் இணைந்திருக்கின்றனர். முக்ரிஸ் மகாதீர், மஸ்லீ மாலிக், மார்சுகி யாஹ்யா, டாக்டர் ஷாருடின் சாலே, சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் ஆகியோரே அந்த ஐவராவார்.

ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிலிம் சட்டமன்ற இடைத் தேர்தலிலும் பெஜூவாங் களம் காண்கிறது. புதிய கட்சிக்கான பதிவு இன்னும் கிடைக்கவில்லையாதலால் தனது வேட்பாளரை சுயேச்சை வேட்பாளராக மகாதீர் அறிவித்திருக்கிறார்.