கோலாலம்பூர்: தெங்கு அட்னான் மன்சோருக்கு தொழிலதிபர் ஒருவர் வழங்கிய 2 மில்லியன் ரிங்கிட் காசோலை அரசியல் நன்கொடை என்றும் முன்னாள் அமைச்சரின் தனிப்பட்ட நலனுக்காக அல்ல என்றும் அவரது வழக்கறிஞர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தலைமை வழக்கறிஞர் டான் ஹோக் சுவான் கூறுகையில், தொழிலதிபர் சாய் கின் காங் உள்ளிட்ட அரசு தரப்பு சாட்சிகளின் சான்றுகள், 2016- ஆம் ஆண்டில் சுங்கை பெசார் மற்றும் கோலா கங்சாரில் நடந்த இரண்டு இடைத்தேர்தல்களுக்கு இந்தப் பணம் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதைக் காட்டியுள்ளதாகக் கூறினார்.
அம்னோ வேட்பாளர்கள் மஸ்துரா முகமட் யாசிட் (கோலா கங்சார்) மற்றும் புடிமான் முகமட் சோஹ்தி (சுங்கை பெசார்) இரு நாடாளுமன்ற இடங்களையும் வென்றனர்.
“சுங்கை பெசார் மற்றும் கோலா கங்சார் இடைத்தேர்தல்களின் நோக்கத்திற்காக எனது கட்சிக்காரர் (தெங்கு அட்னான்) பணத்தை கொடுத்தார் என்பது அவருக்குத் தெரியும் என்று சாய் சாட்சியம் அளித்தார். அவர் (சாய்) அத்தகைய அரசியல் பங்களிப்பை வழங்கியது இது முதல் தடவை அல்ல,” என்று அவர் கூறினார்.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 165 ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டதற்கு எதிராக தெங்கு அட்னான் மேல்முறையீடு செய்துள்ளார்.
கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அவருக்கு 12 மாத சிறைத்தண்டனை விதித்து, 2 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதித்ததை அடுத்து, தெங்கு அட்னான் கடந்த ஆண்டு டிசம்பர் 21 அன்று மேல்முறையீட்டை தாக்கல் செய்தார்.