Home நாடு மாமன்னர் அவசர கால இரத்துக்குக் கையெழுத்திட்டாரா? – தொடரும் அனல் விவாதங்கள்!

மாமன்னர் அவசர கால இரத்துக்குக் கையெழுத்திட்டாரா? – தொடரும் அனல் விவாதங்கள்!

796
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று 3-வது நாளாகத் தொடரும் மலேசிய நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் அனல் பறக்கும் விவாதங்களின் களமாக உருமாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவசர கால சட்டம் இரத்து செய்யப்பட்டதற்கு மாமன்னர் ஒப்புதல் அளித்தாரா இல்லையா என்பதை அறிவிக்க வேண்டும் என்பதை மையமாக வைத்துத்தான் எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமரையும் அரசாங்கத்தையும் நோக்கி கேள்விக் கணைகள் தொடுத்து வருகின்றனர்.

கடந்த 2 நாட்களாக அரசாங்கத்தின் பலவீனங்களையும், தோல்விகளையும் எடுத்துக் காட்டுவதில் தொடங்கி, அவசர கால சட்டத்தை இரத்து செய்வதில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்கள்-சட்ட விதி மீறல்கள் வரை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையான சாடல்களை மக்களைக் கவரும் விதத்தில் அரங்கேற்றி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

அவசரகால சட்டம் முறையான சட்டமுறைகள் பின்பற்றப்படாமல் இரத்து செய்யப்பட்டிருப்பதால் பல்வேறு சட்ட சிக்கல்கள் எழுந்துள்ளன என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடினர்.

திங்கட்கிழமையன்று ( ஜூலை 26) நாடாளுமன்ற முதல் நாளில் பிரதமர் கொவிட் மீட்சித் திட்டத்தை அறிவித்து விட்டு நாடாளுமன்றத்தில் கலந்து கொள்ளாமல் வெளியேறி விட்டதையும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாகக் குறை கூறினர்.

பிரதமருக்கு பதிலாக நிதியமைச்சர் தெங்கு சாப்ருல் கொவிட் மீட்சித் திட்டம் குறித்து விளக்கியதையும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டித்தனர்.

“நாடாளுமன்ற வரலாற்றில் பிரதமர் சமர்ப்பித்த திட்டம் ஒன்று குறித்து நிதியமைச்சர் விளக்கம் சொல்வது இதுதான் எனக்குத் தெரிந்து முதன்முறையாக நடைபெறுகிறது” என அன்வார் இப்ராகிம் சாடினார்.

எனினும் இந்த நடைமுறையைத் தற்காத்த துணைப் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி, கொவிட் மீட்சித் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சராக தெங்கு சாப்ருல் நியமிக்கப்பட்டிருப்பதால் அவர், இது குறித்து நாடாளுமன்றத்தில் பதிலளிப்பதில் தவறில்லை எனக் கூறியிருக்கிறார்.

மேலும் முறையாக, சட்டப்படி, அவசரகால சட்டங்கள் இரத்து செய்யப்படாததால், சட்டப் பிரச்சனைகள் எழுந்துள்ளதையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக் காட்டினர்.

குறிப்பாக அவசர கால சட்டம் இரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஜூலை 21-க்குப் பிறகு காவல் துறை, நடமாட்டக் கட்டுப்பாட்டு நிபந்தனை மீறல்களுக்காக விதித்திருக்கும் 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம் செல்லுபடியாகுமா எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

நீதிமன்றத்தில் அவசர கால சட்டங்கள் தொடர்பில் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளின் நிலைமை இனி என்ன என்பதும் நாடாளுமன்ற விவாதங்களில் மையமாக இருந்து வருகிறது.

அவசர கால சட்டம் இரத்து செய்யப்பட்டதாகக் கூறிய சட்டத் துறை அமைச்சர் தக்கியுடின் ஹாசான் அதுகுறித்துப் போதிய விளக்கங்கள் வழங்காததையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டித்தனர்.

அவசர கால சட்டம் குறித்த விளக்கங்களையும் அந்த சட்டம் இரத்து செய்யப்பட்டதற்கு மாமன்னரின் ஒப்புதல் இருக்கிறதா என்பது குறித்தும் எதிர்வரும் திங்கட்கிழமை, தான் விளக்கவிருப்பதாகவும் தக்கியூடின் ஹாசான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த ஜூலை 21-ஆம் தேதியே அமைச்சரவை அவசர கால சட்டத்தை இரத்து செய்துவிட்டதாக அமைச்சர் கூறியிருப்பதால், அதற்கு மாமன்னரின் ஒப்புதல் இருக்கிறதா இல்லையா என்பதை இப்போதே கூற வேண்டும் என பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் வற்புறுத்தினர்.

நேற்று “திங்கட்கிழமை பதிலளிப்பேன்” என்ற தனது பதிலை வழங்கிவிட்டு அதன் பின்னர் தக்கியூடின் ஹாசான் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

“திங்கட்கிழமை நான் பதிலளிக்க வேண்டும் என்பதை அவைத் தலைவர்தான் நிர்ணயித்திருக்கிறார். அதனால்தான் நான் திங்கட்கிழமை பதிலளிக்கிறேன்” என தக்கியூடின் ஹாசான் கூறியிருக்கிறார்.

நேற்றைய (ஜூலை 27) நாடாளுமன்றக் கூட்டத்தில் சுகாதார அமைச்சர் அடாம் பாபா சுகாதார அமைச்சின் கொவிட் தொற்றுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.

இன்று, புதன்கிழமை (ஜூலை 28) காலை 10.00 மணிக்குத் தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டத்தில், அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சரும் கொவிட் தடுப்பூசித் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சருமான கைரி ஜமாலுடின் கொவிட் தடுப்பூசி நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்து வருகிறார்.

-இரா.முத்தரசன்