ஜோர்ஜ் டவுன் : பினாங்கு மாநிலத்தில் விமரிசையாகக் கொண்டாடப்படும் தைப்பூசம், கடந்த சில வருடங்களாக வெள்ளி இரத பவனி – தங்க இரத பவனி – என இரண்டுக்கும் இடையில் சிக்கலுடன் கொண்டாடப்பட்டு வந்தது. எதிர்வரும் ஜனவரி 25-ஆம் தேதி (2024) கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவிலும் இந்த சிக்கல் – மோதல் – நீடிக்கும் என ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 29) பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்திய இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் – ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் – ஆர்எஸ்என்.ராயர், இந்த ஆண்டு தைப்பூசம் ஒற்றுமையாக கொண்டாடப்படும் என அறிவித்தார். அவருடன் அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் செனட்டர் லிங்கேஸ்வரன் உள்ளிட்ட அறப்பணி வாரியத்தின் ஆணையர்களும் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
2024-ஆம் ஆண்டுக்கான தைப்பூசம் ஜனவரி 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டத்தில் இந்து அறப்பணி வாரியமும் நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலய அறங்காவலர்களும் இணைந்து பேச்சு வார்த்தை நடத்தி சமூகமான முறையில் தைப்பூசத்தை கொண்டாட முடிவு செய்து இருக்கின்றனர் என்றும் ராயர் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் அறக்கட்டளையின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
நாட்டுக்கோட்டை செட்டியார்கள் அறக்கட்டளையுடன் தாங்கள் நல்லுறவு கொண்டிருப்பதாகவும் இந்த முறை பினாங்கு தைப்பூசம் உலகத் தரத்தில் ஒற்றுமையுடன் கொண்டாடப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் ராயர் தெரிவித்தார்.
பினாங்கு தைப்பூச கொண்டாட்டத்தின் நோக்கம் அந்த மாநிலத்தில் உள்ள இந்துக்களை மட்டுமல்லாது நாடு தழுவிய அளவில் அவர்களை ஒற்றுமைப்படுத்துவதும் ஆகும் என ராயம் கூறினார்.
பினாங்கு மாநிலத் தைப்பூசத்தில் நாடு முழுவதிலும் இருந்து இந்துக்கள் வந்து கலந்து கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுவரையில் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் ஆலய அறக்கட்டளையினர் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகளுக்காக மூன்று சந்திப்புக் கூட்டங்களை நடத்தி இருப்பதாக அதன் தலைமை அறங்காவலர் லட்சுமணன் தெரிவித்தார்.
1865-இல் தொடங்கிய பினாங்கு தைப்பூச இரத ஊர்வலம்
பினாங்கு தைப்பூசத்தில் இரத ஊர்வலம் என்பது 1856-ஆம் ஆண்டில் தொடங்கியது. அப்போது முதல் அடுத்து வந்த சுமார் 120 ஆண்டுகளுக்கு வெள்ளி ரதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.
பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் முன்னாள் தலைவருமான பேராசிரியர் இராமசாமி முயற்சியில் 2017 ஆம் ஆண்டு புதிய தங்க இரதம் ஒன்று கட்டப்பட்டு அதற்கான ஊர்வலம் தைப்பூசத்தின்போது நடத்தப்பட்டது.
அடுத்து வந்த ஆண்டுகளில் எந்த ரதம் முதலில் செல்வது – எந்த ரதத்திற்கு முக்கியத்துவம் – என்பது போன்ற சர்ச்சைகள் எழுந்தன.
அதே பிரச்சனை இந்த ஆண்டும் தொடரும் என ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வந்த நிலையில் இரு தரப்புகளும் ஒன்று கூடி பேச்சு வார்த்தை நடத்தி நிலைமையை சீர்படுத்தி இருப்பது நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்பட்டது. இந்த சுமுகமான ஏற்பாடுகளின் மூலம் இரண்டு ரதங்களும் ஒரே நேரத்தில் ஒன்றாக ஊர்வலமாக செல்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
நாட்டுக்கோட்டை செட்டியார்கள் ஆலயத்தின் சார்பில் நடத்தப்படும் வெள்ளி இரத ஊர்வலத்தில் முருகக் கடவுள் உற்சவமூர்த்தியாக பினாங்கு வீதிகளில் உலா வருவார். ‘கோவில் வீடு’ என்னும் இடத்திலிருந்து தைப்பூசத்திற்கு முதல் நாள் காலை 6 மணிக்கு புறப்படும் வெள்ளி இரதம் அன்றிரவு 10 மணியளவில் நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலயத்தை அடைவது வழக்கம்.
ஆனால் 2017 ஆம் ஆண்டு முதல், ஒரு மணி நேர இடைவெளி கிடையில் 2 ரதங்களின் ஊர்வலங்களும் புறப்பட்டன இதனால் சில குழப்பங்களும் சர்ச்சைகளும் ஏற்பட்டன.
இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்துக் கருத்துரைத்த பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரும், பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் முன்னாள் தலைவருமான பேராசிரியர் ப.இராமசாமி, “தைப்பூசத்தை நிர்வகிப்பதில் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் உறுதியாகவும் தைரியமாகவும் செயல்பட வேண்டும்” என வேண்டுகோள் விடுத்திருந்தார்.