Home நாடு சரவாக்கின் புதிய ஆளுநர் நியமனம் – இன்னும் நீடிக்கும் மர்மம்

சரவாக்கின் புதிய ஆளுநர் நியமனம் – இன்னும் நீடிக்கும் மர்மம்

431
0
SHARE
Ad
அப்துல் தாயிப் மாஹ்முட்

கூச்சிங் : சரவாக் மாநிலத்தில் அடுத்த ஆளுநராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் வான் ஜூனாய்டி துவாங்கு ஜாபார் தனது நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டார் என ஆரூடங்கள் வெளியிடப்பட்டன.

எனினும் அவர் பதவியேற்பது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. சரவாக் ஆளுநர் நியமனம் இன்னும் மர்மமாகவே இருந்து வருகிறது.

இதற்கிடையில் எதிர்வரும் திங்கட்கிழமை சரவாக்கின் புதிய ஆளுநர் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு, மாமன்னரின் அரண்மனையில் நியமனம் கடிதம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், நாளை வெள்ளிக்கிழமை (ஜனவரி 25) வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

சரவாக்கின் அசைக்க முடியாத – வலிமை மிகுந்த – முதலமைச்சராக 33 ஆண்டுகள் கோலோச்சிய துன் அப்துல் தாயிப், 2014 முதல் சரவாக்கின் ஆளுநராகப் பதவி வகித்து வருகிறார். அவரின் 3-வது தவணைக் காலம் அடுத்த மாதம் பிப்ரவரியோடு முடிவுக்கு வருகிறது. தற்போது அவர் உடல் நலம் குன்றியிருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

புதிய ஆளுநரின் நியமனத்துடன், அப்துல் தாயிப், சரவாக் அரசியலில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொண்டிருந்த இறுக்கமான பிடியும், ஆளுமையும் ஒரு முடிவுக்கு வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். அப்துல் தாயிப் மீது கடந்த காலங்களில் பல ஊழல் புகார்கள் எழுந்திருந்தாலும்,  அவரும் அவரின் குடும்பத்தினரும் எந்த விவகாரத்திலும் சிக்கியதில்லை.

ஆளுநராக பதவி வகித்தபோது சரவாக் அரசியலில் அப்துல் தாயிப் முக்கியப் பங்கு வகித்தார் என்ற தகவலும் எப்போதும் உலவி வந்தது.

சரவாக் ஆளுநருக்கான புதிய நியமனம் மாமன்னரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும் உறுதிப்படுத்தியுள்ளார்.