Home நாடு டாயிம் சைனுடின் : நிதியமைச்சராக அதிகாரத்தின் உச்சியில்…! இப்போது நீதிமன்றத்தில்…!

டாயிம் சைனுடின் : நிதியமைச்சராக அதிகாரத்தின் உச்சியில்…! இப்போது நீதிமன்றத்தில்…!

535
0
SHARE
Ad
துன் டாயிம் சைனுடின்

கோலாலம்பூர்:  முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் தனது 86-வது வயதில், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி திங்கட்கிழமை ஜனவரி 30-ஆம் நாள் கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றம் வந்தடைந்த காட்சியைக் கண்டவர்களுக்கு அவர் மீது பரிதாபம் ஏற்பட்டிருக்கும்.

அதே சமயத்தில் 1980-ஆம் ஆண்டுகளில் அவர் அம்னோவின் பொருளாளராக, நிதியமைச்சராக அதிகாரத்தில் வலிமையோடு வலம் வந்த காட்சிகள் – அவர் மீது எழுந்த ஊழல் புகார்கள் – போன்ற விவகாரங்களும் பலரின் மனங்களில் மீண்டும் திரைக் காட்சிகள் போன்று ஓடத் தொடங்கியிருக்கும்.

டாயிம் சைனுடின் வழக்கறிஞராக இருந்தாலும் வணிகத்தில் ஆர்வம் காட்டினார். இன்றைக்கு தாமான் மாலூரி வீடமைப்புத் திட்டமாக பரந்து விரிந்து கிடக்கும் வீடமைப்புத் திட்டம் டாயிம் முதன் முதலாக உருவாக்கிய திட்டம். மற்ற மலாய் வணிகர்களைப் போன்று பெயரைக் கொடுத்து விட்டு ஒரு கமிஷன் போன்ற தொகைக்காகக் காத்திருக்காமல் நேரடியாக வணிகத்தில் ஈடுபடத் தொடங்கினார்.

மகாதீரின் நெருக்கம் அரசியலில் உச்சிக்குக் கொண்டு சென்றது

#TamilSchoolmychoice

கெடா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் மகாதீருடன், பழக்கமும் நெருக்கமும் கொண்டிருந்தார் டாயிம். இருந்தாலும் அவரின் அதிர்ஷ்டம் மகாதீர் பிரதமரானார். மகாதீர் பிரதமரானபோது நிதியமைச்சராக இருந்தவர் துங்கு ரசாலி ஹம்சா. அவருக்கும் மகாதீருக்கும் மோதல்கள் எழுந்ததன் காரணமாக அவர் அனைத்துலக வாணிப தொழில்துறை அமைச்சராக அமைச்சுப் பதவி மாற்றப்பட்டார்.

துங்கு ரசாலிக்கு பதிலாக நிதியமைச்சரானார் டாயிம். அதன் பின்னர் அம்னோ அரசியலில் முக்கியத்துவம் பெற்றார். அன்வார் இப்ராகிமின் வரவுதான் டாயிமின் ஆதிக்கத்தை மெல்ல மெல்ல முடக்கியது எனலாம்.

1990-ஆம் ஆண்டுகளில் கபார் பாபா அம்னோ துணைத் தலைவராக – துணைப் பிரதமராக இருந்தாலும் மகாதீருக்கு அடுத்த தலைவராக அன்வார் இப்ராகிம்தான் பார்க்கப்பட்டார்.

அதன் காரணமாக, 1990-இல் அம்னோ உதவித் தலைவராக இருந்து, நிதியமைச்சரானார் அன்வார். அடுத்த 3 ஆண்டுகளில் நிதியமைச்சராகத் தன் அரசியல் பலத்தை விரிவாக்கினார். 1993-இல் அம்னோ துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார்.

கபார் பாபாவை போதிய அம்னோ தொகுதிகள் முன்மொழியாததால், துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடாமல் பின்வாங்கினார் அவர். நிதியமைச்சராகவும் துணைத் தலைவராகவும் வலம் வந்த அன்வார், மகாதீருக்கு அடுத்த தலைவர் என அம்னோவினர் நினைத்திருக்க, அன்வாரின் அரசியல் வாழ்க்கையில் திரைக்கதையை மாற்றி எழுதினார் மகாதீர்.

அன்வார் நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட, மீண்டும் அந்தப் பதவியில் அமர்ந்தார் டாயிம்.

அன்வாரை சதியாலோசனை மூலம் வீழ்த்திய கும்பலில் முக்கியப் பங்கு வகித்தவரும் டாயிம்தான் என்ற ஆரூடமும் உண்டு.

பின்னர் 2001-இல் நிதியமைச்சுப் பொறுப்பிலிருந்தும் விலகிக் கொண்டார் டாயிம். அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டாலும் பின்னணியில் அமைதியாக தீவிர வணிக பேரங்களில் அவர் ஈடுபட்டு வருகிறார் என்ற ஆரூடங்கள் உலவின. சில அயல்நாட்டு வங்கிகளில் அவர் பங்குகள் வைத்திருக்கிறார் என்றும் வதந்திகள் எழுந்தன.

2018 பொதுத் தேர்தலில் மகாதீருக்கு ஆதரவாக களத்தில் இறங்கினார் டாயிம்.

தொடர்ந்து பிரதமரான மகாதீருடன் இணைந்து அரசாங்கத்தில் பணியாற்றினார். சீனாவுக்கும் பிரதமரின் பிரதிநிதியாக சென்றார்.

இப்போது 86-வது வயதில் 71 சொத்துகளை அறிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார் டாயிம். குற்றச்சாட்டை மறுத்து விசாரணையை கோரினார்.

கடந்த வாரம் அவரது மனைவி தோபுவான் நைமா அப்துல் காலிட் இதே போன்ற குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் எதிர்நோக்கினார்.

குற்றப்பத்திரிகையின்படி, 2009 மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) சட்டம் 2009 இன் பிரிவு 36 (1) (b) இன் கீழ் அறிவிப்பு விதிமுறைகளுக்கு இணங்கவில்லை என்று டாயிம் ஒரு எழுத்துப்பூர்வ அறிக்கையை சத்தியப் பிரமாணத்தின் கீழ் அளித்துள்ளார்.

டாயிம் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் , ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் RM100,000-க்கு மிகாமல் அபராதம் விதிக்கப்படும்.

குற்றப் பத்திரிகையோடு நேற்றைய நீதிமன்ற வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட பட்டியலில், ஒரு வங்கிக் கணக்கு, ஏழு சொகுசு கார்கள், 38 நிறுவனங்கள் மற்றும் 25 நிலங்கள், கோலாலம்பூர், நெகிரி  செம்பிலான், பகாங் மற்றும் பேராக் ஆகிய இடங்களில் உள்ள சொத்துக்கள் அடங்கும்.

நீதிபதி அசுரா அல்வி RM280,000 என ஜாமீன் தொகையை நிர்ணயித்தார். கூடுதல் ஜாமீன் நிபந்தனை எதுவும் விதிக்கவில்லை.

“அவரது ஒரு கண்ணில் பூஞ்சை தொற்றும் உள்ளது. இது கண் அகற்றப்படுவதற்கு காரணமாக இருந்தது,” என்று டாயிமின் வழக்கறிஞர் புரவலன் கூறினார்.