Home நாடு சுங்கை பாக்காப் இடைத் தேர்தல் ஜூலை 6-ஆம் தேதி நடைபெறும்

சுங்கை பாக்காப் இடைத் தேர்தல் ஜூலை 6-ஆம் தேதி நடைபெறும்

314
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : சுங்கை பாக்காப் இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு எதிர்வரும் ஜூலை 6-ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுத் தாக்கல் ஜூன் 22-ஆம் தேதி நடைபெறும்.

முன்கூட்டிய வாக்களிப்பு ஜூலை 2-ஆம் தேதி நடைபெறும். இந்த விவரங்களை மலேசியத் தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர் அஸ்மி ஷாரோம் அறிவித்தார்.

இந்த இடைத் தேர்தலுக்கான செலவினம் 2.1 மில்லியனாக மதிப்பிடப்படுவதாக அஸ்மி மேலும் தெரிவித்தார்.

மலேசியத் தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர் அஸ்மி ஷாரோம்
#TamilSchoolmychoice

பக்காத்தான் கூட்டணி சார்பில் பிகேஆர் கட்சி அந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் என பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் இயோ அண்மையில் அறிவித்திருந்தார்.

பாஸ் கட்சி பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி சார்பில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் ஆணையம் இன்று வியாழக்கிழமை ஜூன் 6-ஆம் தேதி சுங்கை பாக்காப் இடைத் தேர்தல் குறித்து சந்திப்புக் கூட்டம் நடத்தியது. அதைத் தொடர்ந்து மேற்கண்ட விவரங்கள் வெளியிடப்பட்டன.

கோலகுபு பாரு இடைத் தேர்தலின் வெப்பம் தணிவதற்கு முன்பே இன்னொரு சட்டமன்ற இடைத் தேர்தலை நாடு எதிர்நோக்கவுள்ளது. பினாங்கு சுங்கை பாக்காப் சட்டமன்ற உறுப்பினர், 56 வயதான நோர் சாம்ரி லாத்திஃப் கடந்த மே 24-ஆம் தேதி காலமானார்.

சுங்கை பாக்காப், பினாங்கு மாநிலத்தின் நிபோங் திபால் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் 3 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.

கோலகுபு பாரு போன்றே வாக்காளர்களை இனவிழுக்காடு ரீதியாகக் கொண்டிருக்கும் சட்டமன்றம் சுங்கை பாக்காப் ஆகும். கடந்த ஆண்டு புள்ளிவிவரங்களின்படி 59.4 விழுக்காட்டு மலாய் வாக்காளர்களையும், 22.5 விழுக்காட்டு சீன வாக்காளர்களையும், 17.4 விழுக்காடு இந்திய வாக்காளர்களையும் 0.7 விழுக்காடு மற்ற வாக்காளர்களையும் சுங்கை பாக்காப் கொண்டிருக்கிறது.

நோர் சாம்ரி நிபோங் திபால் தொகுதி பாஸ் கட்சியின் தலைவருமாவார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அவர் 1,563 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த நூர்ஹிடாயா சே ரோஸ் ஆவார்.