ஷா ஆலாம் : இஸ்லாம் புனித சொற்கள் பதிப்பிக்கப்பட்ட காலுறை விற்பனை பெரும் சர்ச்சைகளைச் சந்தித்த கேகே மார்ட் நிறுவனம் மீது அரசாங்கம் வழக்கும் தொடுத்தது.
அந்த வழக்கில் ஷா ஆலாம் அமர்வு நீதிமன்றம் (செஷன்ஸ்) கேகே மார்ட் நிறுனத்திற்கும் (KK Supermart & Superstore Sdn Bhd – KK Mart) சர்ச்சைக்குரிய காலுறைகளை விநியோகித்த ஜின் ஜியாங் சாங் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்திற்கும் (Xin Jian Chang Sdn Bhd) தலா 60,000 ரிங்கிட் அபராதம் விதித்து நேற்று திங்கட்கிழமை (ஜூன் 15) தீர்ப்பளித்தது.
இந்த வழக்கில் கேகே மார்ட் உரிமையாளர் டத்தோஸ்ரீ சாய் கீ கான் அவரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ லோ சியூ முய் இருவரையும் நீதிமன்றம் மற்ற மதத்தினரைப் புண்படுத்தும் குற்றவியல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்தது.
சர்ச்சைக்குரிய காலுறைகளை விநியோகம் செய்த சில தனிநபர்களையும் நீதிபதி முகமட் அனாஸ் மஹாட்சிர் விடுதலை செய்தார்.
கே.கே.மார்ட் நிர்வாகிகள் குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி மேற்குறிப்பிட்ட அபராதத் தொகையை விதித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் சரவாக் மாநிலத்தின் தலைநகர் கூச்சிங்கில் இயங்கும் கே.கே.மார்ட் கிளை ஒன்றின் மீது கடந்த ஞாயிறு (மார்ச் 31) போத்தல் வெடிகுண்டு வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய கே.கே.மார்ட் விவகாரத்தில் 3 கிளகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
காலுறைகளில் இஸ்லாமிய மதம் தொடர்பான வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததால் கே.கே.மார்ட் மீது கண்டனங்களை அம்னோ இளைஞர் பகுதி முன்வைத்தது.
அதைத் தொடர்ந்து, பேராக், பீடோர் வட்டாரத்திலுள்ள கே.கே.மார்ட் கிளை மீது மார்ச் 26-ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்தப்பட்டது. மார்ச் 29-ஆம் தேதி குவாந்தானிலுள்ள கே.கே.மார்ட் மீது இரண்டாவது தாக்குதல் நடத்தப்பட்டது.
சரவாக்கில் 3-வது தாக்குதல் நடத்தப்பட்டது.