Home நாடு நஜிப் வீட்டுக் காவல்: கூட்டரசு நீதிமன்றம் முட்டுக்கட்டை! நஜிப்புக்கு மீண்டும் ஏமாற்றம்!

நஜிப் வீட்டுக் காவல்: கூட்டரசு நீதிமன்றம் முட்டுக்கட்டை! நஜிப்புக்கு மீண்டும் ஏமாற்றம்!

76
0
SHARE
Ad
டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்

புத்ரா ஜெயா : தனது வீட்டுக் காவல் தொடர்பில் முன்னாள் மாமன்னரின் அரச உத்தரவு இணைப்பு இருப்பதை நிரூபிக்கவும், அதைத் தொடர்ந்து தனக்கு வீட்டுக் காவல் வழங்கப்பட வேண்டும் என்றும் போராடி வரும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு இன்னொரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அரச உத்தரவு இணைப்பை நிரூபிக்கும் நஜிப்பின் நீதிமன்றப் போராட்டத்தை எதிர்த்து சட்டத் துறை தலைவர் (அட்டர்னி ஜெனரல் செய்த மனுவை நேற்று திங்கட்கிழமை (ஏப்ரல் 28) கூட்டரசு நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

கூட்டரசு நீதிமன்றம்

இதன் மூலம் தனது வீட்டுக் காவல் விவகார வழக்கு மேலும் தாமதமாகலாம் என நஜிப் ஏமாற்றமடைந்துள்ளார் என அவரின் வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லா கூறியுள்ளார். ஏற்கனவே இந்த வழக்கு ஓராண்டு 4 மாதங்களாக இழுபறி நிலையில் நீடித்து வருகின்றது.

#TamilSchoolmychoice

நேற்றைய கூட்டரசு நீதிமன்ற அமர்வின் 3 நீதிபதிகளும் ஒருமனதாக சட்டத் துறைத் தலைவரின் மனுவை அனுமதித்துத் தீர்ப்பு வழங்கினர்.

இனி இந்த வழக்கு கூட்டரசு நீதிமன்றத்தில் இரு நாட்களுக்கு ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி நடைபெறும்.

நஜிப்புக்கு வீட்டுக் காவல் வழங்கும் அரச உத்தரவு இணைப்பு பிறப்பிக்கப்பட்டதை நடப்பு பகாங் ஆட்சியாளரும் 16-வது மாமன்னருமான சுல்தான் அப்துல்லா உறுதிப்படுத்தியுள்ளார். அந்த அடிப்படையில் நஜிப்பின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வாதாடி வருகின்றனர்.

ஆனால், அரசாங்கத் தரப்போ, சம்பந்தப்பட்ட அரச மன்னிப்பு வாரியத்தில் நஜிப்புக்கான வீட்டுக் காவல் விவாதிக்கப்படவில்லை – எந்த முடிவும் எடுக்கப்படவில்லை – என வாதிடுகிறது.

எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் தொடர்பான ஊழல் வழக்கில், கடந்த 2024, ஜனவரி 29-ஆம்  தேதி கூடிய அரச மன்னிப்பு வாரியம் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையை 6 ஆண்டுகளாகவும், 210 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை 50 மில்லியன் ரிங்கிட்டாகவும் குறைக்கும் முடிவை மட்டுமே எடுத்ததாக அரசாங்கத் தரப்பு தெரிவிக்கின்றது.

ஷாபி அப்துல்லா

“அரச உத்தரவு இணைப்பை சட்டரீதியாக செயல்படுத்த முடியுமா என்பது வேறு விஷயம். ஆனால் அத்தகைய உத்தரவு உண்மையில் இருக்கிறதா இல்லையா என அரசாங்கம் ஏன் ஒப்புக் கொள்ள மறுக்கிறது? இதுகுறித்து பிரதமர் அன்வாரும் இருமுறை ஒப்புக் கொண்டார். ஆனால், அது சம்பந்தமான அதிகாரம் இல்லை என கைநழுவுகிறார். ஏன் அரசாங்கம் இவ்வாறு நடந்து கொள்கிறது?” என வழக்கறிஞர் ஷாபி அப்துல்லா, நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பினார்.

இந்த ஆண்டு (2025) ஜனவரி 6-ஆம் தேதி, 3 நீதிபதிகள் கொண்டு மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு, 2-1 பெரும்பான்மை தீர்ப்பின்படி, நஜிப் வீட்டுக் காவல் மீதான விவகாரத்தை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் மறுவிசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.

நேற்றைய கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, நஜிப் வீட்டுக் காவல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் இடைக்காலத்திற்கு நிறுத்தி வைக்கும் உத்தரவையும் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நேற்று (ஏப்ரல் 28) பிறப்பித்தது. இருதரப்பு வழக்கறிஞர்களின் ஒருமனதான விண்ணப்பத்தைத் தொடர்ந்து கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியது.

அடுத்த கட்ட வழக்கு மேலாண்மைக்கான (நிர்வாகத்திற்கான) தேதியாக ஜூலை 3-ஆம் தேதியை உயர்நீதிமன்றம் நிர்ணயித்தது.

கூட்டரசு நீதிமன்றம் இந்த விவகாரத்தில் இறுதிக்கட்டத் தீர்ப்பை வழங்கும் வரை உயர்நீதிமன்றத்திலுள்ள நஜிப் வீட்டுக் காவல் வழக்குகள் அனைத்தும் இடைநிறுத்தம் செய்யப்படும்.

எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் தொடர்பான 42 மில்லியன் ஊழல் வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நஜிப், 23 ஆகஸ்ட் 2022 முதல் காஜாங் சிறைச்சாலையில் தனக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார்.