Home நாடு “ஹிண்ட்ராப் ஒப்பந்தம் குறித்து பிரதமர் தான் பதிலளிக்க வேண்டும்” – கணேசன்

“ஹிண்ட்ராப் ஒப்பந்தம் குறித்து பிரதமர் தான் பதிலளிக்க வேண்டும்” – கணேசன்

718
0
SHARE
Ad

hindraf n.ganesan

கோலாலம்பூர், ஏப்ரல் 22 – ஹிண்ட்ராப் – தேசிய முன்னணி செய்து கொண்ட ஒப்பந்தம் என்ன ஆனது என்பதற்கு பிரதமர் நஜிப் துன் ரசாக் தான் பதிலளிக்க வேண்டும் என ஹிண்ட்ராப் ஆலோசகர் நா. கணேசன் கூறியுள்ளார்.

மலேசியாவில் பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ள இந்தியர்களின் முன்னேற்றத்திற்காக தான் ஹிண்ட்ராப் இந்த ஒப்பந்தத்தை செய்தது என்பதை பிரதமர் புரிந்து கொண்டு, இயக்கத்தின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த 58 ஆண்டுகளாக, அரசாங்கம் மக்களுக்கு ஏராளமானதை செய்து வருகின்றது என மூன்றாம் தரப்பினர் கருத்துரைப்பது, இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை நீர்த்துப் போகச் செய்வதாகும் என்றும் கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும், “குறைந்த வருமானம் பெறும் இந்தியர்கள் தங்களின் வருமானத்தை இரட்டிப்பாக்க வழி செய்யப்படும் என்றும், அவர்களுக்காக பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் தீட்டப்படும் என்றும் அறிவித்த தேமு அரசு 2013 பொதுத் தேர்தலுக்கு பின் அதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன என்று பட்டியலிட முடியுமா?” என்றும் கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், அவர் கூறியிருப்பதாவது:-

“ஹிண்ட்ராப் ஒப்பந்தத்தின்படி, இடம் பெயர்ந்த தோட்டத்தொழிலாளர்களுக்காக தேசிய அளவில் ஒரு இலட்சம் வீடுகள் 2018-ஆம் ஆண்டிற்குள் வழங்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் கடந்த இரண்டாண்டுகளில் 40,000 வீடுகளாவது வழங்கப்பட்டிருக்க வேண்டும்.”

“அதே போல் தோட்டங்களில் இருந்து  இடம் பெயர்ந்த இளைஞர்களின் மேம்பாட்டிற்காக, நாடு முழுவதும் உள்ள 176 கியாட்மாரா மையங்கள், 78 சமூகக் கல்லூரிகள், ஏனைய தொழிற்பயிற்சி நிலையங்களில் எல்லாம் வழங்கப்பட வேண்டும்.”

“நாட்டில் உள்ள ஆலயங்கள், தேவாலயங்கள், இடுகாடுகள் எதுவும் 2013-இல் எப்படி இருந்தனவோ அதன்படி நீடிக்க வேண்டும். மாறாக, இடமாற்றம் செய்யக்கூடாது என்று ஒப்பந்தத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், ஆலயங்கள் அவ்வப்பொழுது இடிக்கப்படுவது தொடர்ந்து வருகின்றது”

“ஹிண்ட்ராப் இயக்கமும் தேசிய முன்னணி அரசும் கையொப்பமிட்டுக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பற்றி கேள்வி எழுப்பினால், 7 புதிய தமிழ்ப்பள்ளிகளுக்கு தேசிய முன்னணி அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. மெட்ரிகுலேஷன் பயில 1,500 இடங்கள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதி அளிக்கப்பட்டுள்ளது. இணைக்கட்டட வசதி, பாலர் கல்வி வசதி என்றெல்லாம் கல்வித்துறை துணை அமைச்சர் ப.கமலநாதனும் தமிழ்ப்பள்ளிகள் உருமாற்ற செயல்திட்ட பொறுப்பாளர் பேராசிரியர் டத்தோ என்.எஸ். இராஜேந்திரனும் அறிக்கை விடுவது மக்களை குழப்பும் நடவடிக்கையாகும்.”

“பிரதமர் தான் இதற்கு நேரடியாகப் பதில்கூற வேண்டுமே தவிர மூன்றாம் தரப்பினர் அல்ல” என்று கணேசன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.