கோலாலம்பூர் – நாட்டையே உலுக்கிய சம்பவம் டத்தோ கிராமாட் தாபிஸ் இஸ்லாமியச் சமயப் பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்தாகும்.
இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் முதலில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது – இத்தனை உயிர்ப் பலிகளா என்ற தகவல்தான்!
ஆனால், அடுத்த சில நாட்களில் வெளிவந்த இன்னொரு தகவல் மக்களை இன்னொரு அதிர்ச்சிக் கட்டத்திற்கு அழைத்துச் சென்றது.
ஆம்! இந்த தீவிபத்தைத் திட்டமிட்டுப் புரிந்தவர்கள் வயது குறைந்த பதின்ம வயது இளைஞர்கள் என்பதுதான் அடுத்த அதிர்ச்சித் தகவல். சில சிறுவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதும், நாட்டின் சமூக சீர்கேடுகள் எந்த அளவுக்கு பரவியிருக்கின்றன என்பது குறித்த வாதப் பிரதிவாதங்களும் அரங்கேறின.
விசாரணைகள் முடிந்து நேற்று வியாழக்கிழமை 16 வயதுடைய இரண்டு மாணவர்கள் கோலாலம்பூர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர். இவர்களோடு சேர்த்து மேலும் 7 பேர் போதைப் பொருள் உட்கொண்ட குற்றங்களுக்காக நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.
வயது குறைந்தவர்கள் என்ற காரணத்தால் இவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை என்பதோடு, இவர்கள் குற்றம் சாட்டப்பட்ட நீதிமன்ற நடவடிக்கைகளைப் பார்க்க பார்வையாளர்களும், பத்திரிக்கையாளர்களும் அனுமதிக்கப்படவில்லை.
கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி அதிகாலை நிகழ்ந்த தீவிபத்தில் 21 மாணவர்களும், 2 காவலாளிகளும் மரணமடைந்தனர். இந்தக் கொலைக் குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு மாணவர்கள் மீதும் மொத்தம் 23 கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கின்றன.
எனினும் குற்றம் சாட்டப்பவர்கள் ஒப்புக் கொள்கிறார்களா இல்லையா என்ற வாக்குமூலம் நேற்றைய நீதிமன்ற விசாரணையில் பதிவு செய்யப்படவில்லை.