Home நாடு நியமனப் பதவி கூட இல்லை! ஜசெகவில் ஓரங்கட்டப்படும் இராமசாமி!

நியமனப் பதவி கூட இல்லை! ஜசெகவில் ஓரங்கட்டப்படும் இராமசாமி!

1747
0
SHARE
Ad

ramasamy-dap-deputy-chief-ministerகோலாலம்பூர் – ஜசெகவின் இந்திய முகமாகவும், அந்தக் கட்சிக்கு ஆதரவாக இந்திய வாக்காளர்களை ஒன்று திரட்டும் ஆற்றல் வாய்ந்தவர் என்றும் பார்க்கப்பட்ட பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி கடந்த ஞாயிற்றுக்கிழமை (12 நவம்பர் 2017) ஷா ஆலாமில் நடைபெற்ற கட்சித் தேர்தலில் மோசமான முறையில் தோல்வியைத் தழுவியிருப்பது நாடெங்கும் இந்தியர்களிடையே கடந்த சில நாட்களாக விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. அவரது அரசியல் முன்னேற்றத்திற்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

DAP-Logo-Featureஅதுமட்டுமின்றி, பக்காத்தான் ஹரப்பான் எதிர்க்கட்சிக் கூட்டணி சார்பாக இந்தியத் தலைவர்களுக்குத் தலைமையேற்று, எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில் இந்திய வாக்காளர்களை எதிர்க்கட்சிக் கூட்டணியின் பக்கம் திசை திருப்புவதிலும் இராமசாமி முக்கியப் பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அந்த எதிர்பார்ப்பும் சிதைந்து விட்டது.

இரண்டு தவணைகளாக சட்டமன்ற உறுப்பினர், ஒரு தவணைக்கு (2008-2013) நாடாளுமன்ற உறுப்பினர், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர், எல்லாவற்றுக்கும் மேலாக முதன் முறையாக பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் – என அடுக்கடுக்காக பல பதவிகளைப் பெற்றும், சொந்தக் கட்சியிலேயே, 20 பேர் கொண்ட மத்திய செயலவையில் ஓர் இடம் கூட வெற்றி பெற முடியாத அவல நிலை இராமசாமிக்கு ஏற்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

அதை விட முக்கியமாகப் பார்க்க வேண்டியது என்னவென்றால், கட்சித் தேர்தல்கள் முடிவடைந்தவுடன், உடனடியாக பத்து பேர் ஜசெகவின் மத்திய செயலவையில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அதில் ஒருவராகக் கூட இராமசாமி நியமனம் பெறவில்லை.

ஜசெக தேர்தலில் வென்ற 20 பேரில் 16 பேர் சீனர்கள். மூவர் மட்டுமே இந்தியர்கள் ஒருவர் மலாய்க்காரர்.

தேர்தலுக்குப் பின்னர் மத்திய செயலவையில் நியமனம் பெற்ற 10 பேர்களில் ஒருவர் கூட இந்தியரில்லை.

இதிலிருந்து, ஜசெகவின் தலைமைத்துவமே இராமசாமியின் இருப்பை விரும்பவில்லை என்பதும், அவரை ஓரங்கட்டத் தொடங்கி விட்டார்கள் என்பதும் தெள்ளத் தெளிவாகியிருக்கிறது.

14-வது பொதுத் தேர்தலில் மீண்டும் போட்டியில்லையா?

GE-14-logoஇதனைத் தொடர்ந்து எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில் இராமசாமிக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என்ற ஆரூடங்கள் எழுந்திருக்கின்றன.

அப்படியே அவருக்கு மீண்டும் பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டாலும், துணை முதல்வர் பதவி வழங்கப்பட மாட்டாது என்றே கருதப்படுகிறது.

மறைந்த கர்ப்பால் சிங் மகனும் டத்தோ கிராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜக்டிப் சிங் டியோ அடுத்த முறை ஜசெக பினாங்கை மீண்டும் கைப்பற்றினால் துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினராக இருக்கும் அவர், அதற்கான பயிற்சிகளை இப்போதே பெற்று வருகிறார்.

Jagdeep_Singh_Deo
ஜக்டிப் சிங் டியோ

14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் துணை முதல்வர் பதவி இராமசாமிக்கு இல்லை என்பது நடந்து முடிந்த கட்சித் தேர்தல்களை வைத்துப் பார்க்கும்போது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

அப்படியே இராமசாமியைத் தக்கவைத்துக் கொள்ள ஜசெக தலைமைத்துவம் முடிவெடுத்தால், அவரை மாநில அரசியலில் இருந்து ஒதுக்கி வைத்து விட்டு, நாடாளுமன்றத்திற்கு போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற ஆரூடமும் வலுத்து வருகிறது.

2008 பொதுத் தேர்தலில் அவர் போட்டியிட்டு வென்ற பினாங்கு, பத்து கவான் நாடாளுமன்றத் தொகுதியைத் தற்போது ஜசெகவின் கஸ்தூரி பட்டு தற்காத்து வருவதால், மீண்டும் இராமசாமி அங்கே நிறுத்தப்படும் வாய்ப்பும் இல்லை.

இந்த சூழலில், அப்படியே அவருக்கு மீண்டும் நாடாளுமன்றத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டால், பினாங்குக்கு வெளியே உள்ள மாநிலத்தில்தான் அவர் நிறுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

cameron highlands-mano-banner-1கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் இராமசாமி வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற ஆரூடமும் அவ்வப்போது கூறப்பட்டு வருகிறது. தற்போதைக்கு, கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் 2013 பொதுத் தேர்தலில் அங்கு போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.மனோகரன் அந்தத் தொகுதியில் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதோடு, ஜசெக சார்பில் மீண்டும் அந்தத் தொகுதியில் நிறுத்தப்படுவார் என்றும் ஜசெக வட்டாரங்கள் இதுவரை தெரிவித்து வந்தன.

ஜசெகவில் இருந்து முழுமையாக ஓரங்கட்டப்பட்டு, ஒதுக்கித் தள்ளப்பட்டிருக்கும் இராமசாமி, இனி அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட ஜசெக தலைமைத்துவத்தால், வாய்ப்பு வழங்கப்பட்டால் மட்டுமே, அவரது அரசியல் பயணம் தொடரும்!

இல்லாவிட்டால், 14-வது பொதுத் தேர்தலோடு, அவரது அரசியல் பயணம் நிறைவுக்கு வரும்!

-இரா.முத்தரசன்