Home நாடு டாயிம் சைனுடிக்கு எதிராக கோபால் ஸ்ரீராம் கண்டனம்

டாயிம் சைனுடிக்கு எதிராக கோபால் ஸ்ரீராம் கண்டனம்

1318
0
SHARE
Ad
வழக்கறிஞர் கோபால் ஸ்ரீராம்

கோலாலம்பூர் – அரசாங்கத்துக்கான மூத்த ஆலோசகர் மன்றத்தின் தலைவர் துன் டாயிம் சைனுடின் தலைமை நீதிபதி முகமட் ரவுஸ் ஷரிப் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி சுல்கிப்ளி அகமட் மக்கினுடின் ஆகிய இருவரையும் பதவி விலகச் சொல்லி வற்புறுத்தினார் என்ற தகவல்கள் வெளியாகியிருப்பதைத் தொடர்ந்து, அதற்காக முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி கோபால் ஸ்ரீராம் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

டாயிம் சைனுடின் அலுவலகத்தில் அவர்களுக்கு இடையிலான சந்திப்பு நடைபெற்றது “ஒரு திறந்த இரகசியம்” என்றும் ஸ்ரீராம் கூறினார்.

எனினும் எப்போது அந்த சந்திப்பு நடைபெற்றது என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. “பிரதமரைத் தவிர வேறு யாருக்கும் நீதித் துறையின் தலைவர்களை அழைப்பதற்கு அதிகாரமில்லை. அது நாட்டின் அரசியல் சாசனத்திற்கும் எதிரானது” என்றும் ஸ்ரீராம் கூறியதாக மலேசியாகினி தெரிவித்தது.

#TamilSchoolmychoice

மலேசியாகினி ஊடகத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில் இந்தத் தகவல்களை ஸ்ரீராம் தெரிவித்திருக்கிறார்.

டாயிம் சைனுடின் – கோப்புப் படம்

“டாயிம் சைனுடினின் நோக்கம் நல்லதாக இருந்திருக்கலாம். பிரதமரின் உத்தரவின் பேரில் அவர் செயல்பட்டிருக்கலாம். எனினும் இது தவறாகும் அப்படியே அவர் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தாலும், அந்தப் பொறுப்பை அவர் பிரதமரிடமோ, அரசாங்கத் தலைமை வழக்கறிஞரிடமோ, அல்லது அமைச்சரவையிடமோ கையாள ஒப்படைத்திருக்க வேண்டும்” என்றும் ஸ்ரீராம் வலியுறுத்தினார்.

“நாம் மீண்டும் பழைய பாதைக்குத் திரும்பக் கூடாது. அதிகார மையங்களுக்கிடையில் பகிர்வுகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதையும், அரசியல் சாசன நடைமுறைகள் பின்பற்றப்படுவதையும் நாம் உறுதி செய்ய வேண்டும். அதைவிட முக்கியமாக டாயிம் அழைப்பை ஏற்று நீதிபதிகள் ரவுஸ், சுல்கிப்ளி இருவரும் அவரைச் சந்திக்கச் சென்றிருக்கக் கூடாது” என்றும் ஸ்ரீராம் மேலும் கூறியிருக்கிறார்.

“அந்த இரண்டு நீதிபதிகளும் இவ்வாறு அவமதிப்புக்கு உள்ளாவதற்கும், அவர்கள் அலுவலகப் பையன்கள் போல நடத்தப்படுவதற்கும் காரணம் அவர்கள் தங்களின் கட்டாய ஓய்வு வயதுக்குப் பின்னரும் தொடர்ந்து பதவி நீட்டிப்பை அவர்கள் அரசியல் சாசனத்திற்கு எதிராக ஏற்றுக் கொண்டதுதான். எனவே அவர்கள் இருவரும் கௌரவமாக உடனடியாக விலகிக் கொள்ள வேண்டும்” என்றும் ஸ்ரீராம் கேட்டுக் கொண்டார்.