இலண்டன் – இலண்டனுக்கு தனிப்பட்ட வருகை மேற்கொண்டிருக்கும் மலேசியக் கணினி நிபுணர் முத்து நெடுமாறன் அங்கு செயல்படும் திருவள்ளுவர் பள்ளிக்கூடத்திற்கு கடந்த ஜூலை 11-ஆம் தேதி வருகை தந்து அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழ்ப் பணிகளைப் பார்வையிட்ட பின்னர் இலண்டனில் செயல்படும் மற்றொரு தமிழ் இயக்கமான இலண்டன் தமிழ்ச் சங்கத்திற்கு வருகை மேற்கொண்டார். மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட இலண்டன் தமிழ்ச் சங்கம் ஐரோப்பியக் கண்டத்திலேயே மிகப் பழமையான தமிழ் இயக்கமாகும்.
முத்து நெடுமாறனை இலண்டன் தமிழ்ச் சங்கத்தின் செயலகத்திற்கு வரவேற்ற திரு விஜய் சூரியா இலண்டன் தமிழ்ச் சங்கத்தின் தோற்றம், வரலாறு, பணிகள் குறித்து அவருக்கு விளக்கமளித்தார். தமிழ் வகுப்புகள், பரத நாட்டிய வகுப்புகள் நடத்துவது மற்றும் கலாச்சார, சமூக நிகழ்ச்சிகளை நடத்துவது ஆகியவற்றின் மூலம் இலண்டன் வாழ் தமிழர்களையும், பிரிட்டனில் மற்ற பகுதிகளில் வசிக்கும் தமிழர்களையும் மொழியால், இனத்தால் ஒன்றிணைக்கும் மிகப் பெரிய பணியை இலண்டன் தமிழ்ச் சங்கம் இடைவிடாது செய்து வருகிறது.
இலண்டன் தமிழ்ச் சங்கத்திற்கான தனது வருகை குறித்து செல்லியல் ஊடகத்திடம் விவரித்த முத்து நெடுமாறன், மின்னியல் (டிஜிட்டல்) தொழில் நுட்ப உலகில் தமிழ் மொழி கண்டு வரும் மேம்பாடுகள், தமிழ் மொழி பயன்பாட்டை இன்றைய இளைய தலைமுறைக்கும் கொண்டு செல்ல, அவர்களும் தமிழ் மொழியைக் கற்றுப் பயன்பெற, நவீன தொழில்நுட்பத்தின் துணை கொண்டு எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து சங்கத்தின் பொறுப்பாளர்களுடன் கலந்து விவாதித்ததாகக் குறிப்பிட்டார்.