கோலாலம்பூர் : சீ பீல்ட் மகா மாரியம்மன் ஆலய விவகாரம் விசுவரூபம் எடுத்தது முதல் பல்வேறு தரப்பட்ட இந்து ஆலயங்களின் பின்னணிகள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.
கோலாலம்பூர் கம்போங் பாண்டானிலுள்ள ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் 1969-இல் நிகழ்ந்த மே 13 கலவரங்களின்போது எவ்வாறு பல மலாய்க் குடும்பங்களுக்கு புகலிடமாகத் திகழ்ந்து பாதுகாத்தது என்பதை மலாய்க்கார அன்பர் ஒருவர் முகநூலில் பதிவிட அது அதிகமானோரை ஈர்த்தது.
மிகப் பெரிய வணிக வளாகம் கட்டப்படுகின்ற இடத்தில் சீ பீல்ட் மகா மாரியம்மன் ஆலயம் அமைந்திருப்பது நில மேம்பாட்டாளருக்கு இடையூறாக இருக்கிறது என்ற சர்ச்சைகளை நாம் கேட்டுக் கொண்டிருக்கும் போது, பல ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்றதோரு பிரச்சனையைச் சந்தித்தது கோலாலம்பூரின் மிகப் பெரிய வணிக வளாகமான மிட்வேலி மெகாமால் பேரங்காடி.
இதுகுறித்த செய்தியொன்றை வெளியிட்டிருக்கும் ஸ்டார் இணைய ஊடகம் அந்த செய்தியில் இதில் சம்பந்தப்பட்டிருந்த மிட்வேலி சிட்டி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் எம்.கே.சென் என்பவரின் விளக்கத்தையும் வெளியிட்டிருக்கிறது.
கோலாலம்பூரிலுள்ள முக்கிய பேரங்காடிகளில் ஒன்றான மிட் வேலி மெகாமால் (Mid Valley Megamall) வணிக வளாகத்தின் ஊடே குடிக் கொண்டுள்ளது ஸ்ரீ மகா சக்தி மூகாம்பிகை அம்மன் கோயில். மிட் வெலி சிட்டியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் எம்.கே. சென், இப்பேரங்காடியின் பிரம்மாண்டமான கட்டுமானம் முழுமையாக, நல்ல முறையில் முடிவுற்றதற்கு இக்கோயில் இங்கு நிலை நிறுத்தப்பட்டதுதான் என அந்தத் திட்டத்தின் உரிமையாளர்களே கூறியிருக்கின்றனர் எனத் தெரிவிக்கிறார்.
ஒரு பேரங்காடியின் அருகே கோயில் ஒன்றினை அமைப்பது தங்களுக்கு பெரும் சவாலாகவும், மன நிறைவாகவும் இருந்தது என்கிறார் எம்.கே.சென்.
1980- களின் பிற்பகுதியில் மிட் வெலி சிட்டி வளாகத்தை உருவாக்குவதற்கு, ஐ.ஜி.பி (IGB Corporation Bhd) என்ற மேம்பாட்டாளர் அந்த நிலத்தினை கையகப்படுத்தியபோது, அவர்கள் மூன்று பெரிய சவால்களை எதிர்கொண்டனர். அங்குள்ள 600 ஏழ்மையான குடும்பங்களுக்கு மறுவாழ்வு அமைத்துக் கொடுத்த மேம்பாட்டாளர்களுக்கு ஸ்ரீ மகா சக்தி மூகாம்பிகை அம்மன் கோயில் மற்றும் அங்கிருந்த அரச மரத்தின் நிலை குறித்த கேள்விகள் இருந்தன.
இக்கோயிலில் ஆரம்பத்தில் இரண்டு அரச மரங்கள் இருந்தன. நகர மன்றம் ஏற்பாடு செய்திருந்த ஒப்பந்ததாரர்கள் முதல் மரத்தினை வெட்டி அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட கசப்பான விளைவுகளை நினைவு கூர்ந்தார் சென்.
பின்பு கோயில் அறங்காவலர்களை அணுகிய போது, அம்மரம் ஆன்மீக மரமென்றும், தற்பொழுது அது எங்குள்ளதோ அங்கேயே நிலைத்திருக்கட்டும் எனவும் ஆலய உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதன்படியும், அரச மரத்தை வெட்டியதால் ஏற்பட்ட பாதிப்பைக் கருத்தில் கொண்டும் இனி, மிட் வேலியையும் கோயிலையும் பிரித்து நிலை நிறுத்த தமக்கு எண்ணம் வரவில்லையென்றார் சென்.
இது குறித்து பொறியியலாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் குழுவுடன் சென் பேச்சு வார்த்தை நடத்தும் நிலைமை ஏற்பட்டது. இக்குழுவில் சிலர் இந்து மதம் அல்லாதவர் என்பதால் உலகிலேயே முதன் முதலாக பேரங்காடி ஒன்றை கோயிலுடன் இணைந்து எழுப்புவதை இவர்களுக்கு எப்படி எடுத்துரைப்பது எனும் கேள்வியில் இருந்தார் சென்.
சுமுகமான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஐஜிபி குரூப் தலைமை நிர்வாகியான டத்தோ ரோபர்ட் டான் மற்றும் மிட் வேலி சிட்டி தலைமை அதிகாரி அந்தோணி பாராகே ஆகியோர் சென்னின் யோசனைக்கு ஆதரவாகவும் ஆரம்ப செலவினை கொடுக்கவும் ஒப்புக் கொண்டனர்.
16,000 சதுர அடி இருந்த மூகாம்பிகை ஆலயத்திற்கு ஐஜிபி நிறுவனம் 30,000 சதுர அடி இடத்தை 90 வருட நீண்டகால அடிப்படையில் வழங்கியது. அங்கு வரும் பக்தர்களுக்கு வசதியாக வாகனம் நிறுத்துமிடத்தையும் ஏற்பாடு செய்து தந்தனர். ஆலய குருக்கள் தங்குவதற்கான இடம், அதற்கான செலவினங்களையும் மேம்பாட்டாளரான ஐஜிபி நிறுவனமே ஏற்றுக் கொண்டது.
2000-ம் ஆண்டில் மிட் வேலி பேரங்காடி முழுமையாக நிர்மாணிக்கப்பட்டு செயல்படத் தொடங்கியது. கோயில் அதற்கு பின்பு ஒரு வருடம் கழித்துத் திறக்கப்பட்டது. ஒரு பெரிய பேரங்காடியின் அருகே வழிபாட்டு தலங்கள் இருக்க முடியாது எனும் கருத்துகளுக்கு நேர் எதிராக – உலகிலேயே ஒரு மிகப் பெரிய பேரங்காடி வணிக வளாகத்தின் மத்தியில் – ஓர் இந்து ஆலயம் அமைந்திருக்கும் அதிசயத்தை உலகிலேயே மிட் வேலி மெகா மால் வளாகத்தில்தான் காண முடியும்.
இன்றும், மிட்வேலி மெகா மால் வரும் இந்து பக்தர்கள், குறிப்பாக இந்தியா போன்ற அயல்நாடுகளில் இருந்து வரும் இந்துக்கள், மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் வழிபட்டுக் கொண்டே, இத்தகைய பிரம்மாண்டமான வணிக வளாகத்தில் மிகவும் நேர்த்தியாக, அழகுக்கு அழகு கூட்டுவது போல் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தையும் – அதற்கு அடிப்படையான மலேசியாவின் மத நல்லிணக்கத்தையும் அதிசயத்தோடும், ஆச்சரியத்தோடும் பார்த்து விட்டுச் செல்கின்றனர்.
படம் – மூலச் செய்தி – நன்றி : ஸ்டார் இணைய ஊடகம்