Home இந்தியா திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் – ஸ்டாலின் அறிவிப்பு

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் – ஸ்டாலின் அறிவிப்பு

945
0
SHARE
Ad

சென்னை – (மலேசிய நேரம் இரவு 11.00 நிலவரம் – கூடுதல் தகவல்களுடன்) பாஜக, அதிமுக கூட்டணி நேற்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ், திமுக இடையிலான நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சற்று முன்பு அண்ணா அறிவாலயத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இரு கட்சிகளுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கையையும் ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் குழுமியிருந்த பத்திரிக்கையாளர்களிடம் காண்பித்தார்.

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு பாண்டிச்சேரி உள்ளிட்ட 10 நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. இதுகுறித்த பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள  தமிழகக் காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் புதுடில்லியில் இருந்து சென்னை வந்துள்ளார்.

#TamilSchoolmychoice

கூட்டணிக்கான  இறுதிக் கட்ட வடிவத்தை உருவாக்க முக்கியத் தலைவர்கள் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை வருகை தந்தனர்.

தமிழக நாடாளுமன்றத் தொகுதிகளில் 9 தொகுதிகளும் பாண்டிச்சேரியும் காங்கிரசுக்கு ஒதுக்கப்படுகின்றன. எஞ்சிய தொகுதிகளில் யாருக்கு எங்கு தொகுதி ஒதுக்கப்படும் என்ற விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மற்ற கட்சிகளுடனான தொகுதி உடன்பாடுகள் முடிவானதும், காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளும், மற்ற கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்தார்.

கூட்டணி அறிவிப்பில் அதிமுக முந்திக் கொண்ட வியூகம், திமுகவின் தாமதமான அறிவிப்பு, மற்ற கட்சிகளுக்கான தொகுதி உடன்பாடுகள் இன்னும் அறிவிக்கப்படாதது ஆகிய காரணங்களால் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு அரசியல் ரீதியாக பின்னடைவு ஏற்படுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.