கோலாலம்பூர்: அண்மையில் மலாயா பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்க முயன்றதாக கூறப்பட்ட அம்னோவின் உயர்மட்டக் குழு உறுப்பினர் டத்தோ லொக்மான் நூர் அடாம் இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அவர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
கடந்த மார்ச் 22-ஆம் தேதி, லொக்மான் உள்நோக்கத்துடன் மலாயா பல்கலைக்கழக மாணவருக்கு இழப்பீடு ஏற்படும் அளவிற்கு நடந்து கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றவியல் சட்டம் பிரிவு 426 கீழ் அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஐந்து ஆண்டு கால சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.
இரண்டாவதாக, லொக்மானுக்கும், இதர நான்கு அம்னோ உறுப்பினர்களுக்கும், வேண்டுமனே ஒருவருக்கு காயம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதற்காக, குற்றவியல் சட்டம் 323 கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அம்னோ பெட்டாலிங் ஜெயா தொகுதித் தலைவரான, அப்துல் முதாலிப் அப்துல் ராகிம் உட்பட, இதர அம்னோ உறுப்பினர்களான சால்மான் அரிப் புடிமான் முச்லீஸ், முகமட் நோர்சாகிபா முகமட் நாவி, மற்றும் பெயரில்லாத நான்காவது நபரும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளியன்று, மலாயா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் ஆதரவாளர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு நிலவி, அது தள்ளு முள்ளில் முடிந்தது.